சென்னை : தாம்பரம் ரயில் நிலையம் அருகே நிறுத்தி வைக்கப்பட்டிருந்த ரயில் இஞ்சின் மீது திடீரென ஏறி நின்ற பெண் ஒருவரால் பரபரப்பு ஏற்பட்டது.
சென்னை அருகேயுள்ள தாம்பரம் ரயில்வே நிலையத்திற்கு மேற்கும் கிழக்குமாக உள்ள பகுதியை இணைக்கும் சுரங்கப்பாதை பகுதியில், இரவு 9 மணி அளவில், நின்று கொண்டிருந்த ஒரு ரயில் இஞ்சின் மீது 40 வயதிற்கும் மேற்பட்ட பெண் ஒருவர் திடீரென ஏறி நின்றார்.
இதைக் கண்டு அதிர்ச்சியடைந்த பொதுமக்கள் உடனடியாக தாம்பரம் ரயில்வே காவல்துறைக்கு தகவல் அளித்தனர். சம்பவ இடத்திற்கு விரைந்த போலீஸார், பெண்ணை கீழே இறங்கும்படி சொல்லியும், சத்தமிட்டும் கேட்டுள்ளனர். ஆனால், அந்த பெண் எதையும் ஏற்கவில்லை.
பின்னர், போலீஸார் மிகவும் கவனமாக நடந்து, பெண்ணை பத்திரமாக கீழே இறக்கி மீட்டனர். விசாரணையில், அந்த பெண் மனநலம் பாதிக்கப்பட்டவர் என்பதும், அவரது அடையாளம் மற்றும் எங்கிருந்து வந்தவர் என்பதற்கான தகவல்கள் எதுவும் இன்னும் தெரியவில்லை என்பதும் கண்டறியப்பட்டது.
இந்த சம்பவம் குறித்தும், அந்த பெண்ணின் அடையாளம் குறித்து மேலும் விசாரணை நடைபெற்று வருகிறது. குறுகிய நேரத்திற்கு அந்த பகுதியில் பரபரப்பு நிலவியது.