கரூர் மாவட்டத்தில் த.வெ.க. சார்பில் நடைபெற்ற கூட்டத்தில் ஏற்பட்ட பரபரப்பை தொடர்ந்து, கடலூர் மாவட்டத்தில் போஸ்டர் யுத்தம் வெடித்துள்ளது.
கடலூர் மாவட்டம் திட்டக்குடி தொகுதிக்குட்பட்ட பெண்ணாடம்.வேப்பூர், தொழுதூர், திட்டக்குடி. உள்ளிட்ட பகுதிகளில், “கரூர் த.வெ.க கூட்டத்தில் பாதுகாப்பு வழங்கப்படாததால் 41 பேர் உயிரிழந்தனர். இதற்கு முழுப்பொறுப்பு முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கே உண்டு. எனவே அவர் உடனடியாக பதவி விலக வேண்டும்” எனக் குறிப்பிடப்பட்ட போஸ்டர்கள் ஒட்டப்பட்டுள்ளன.
இந்த போஸ்டர்களை பாஜக கடலூர் மேற்கு மாவட்ட தலைவர் தமிழ் அழகன் சார்பாக ஒட்டியதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனால் அந்த பகுதிகளில் அரசியல் பரபரப்பு நிலவுகிறது. கரூர் நிகழ்வில் ஏற்பட்ட உயிரிழப்புக்கு அரசாங்கம் எந்தவித முன்னெச்சரிக்கையும் எடுத்துக் கொள்ளாதது குறித்து பல்வேறு தரப்பினரும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். இந்நிலையில், போஸ்டர் யுத்தம் தொடங்கியுள்ளதால், அரசியல் வட்டாரங்களில் இது குறித்து தீவிரமாக பேச்சு நடந்து வருகிறது.
