சென்னை :
தமிழ்நாடு சட்டப்பேரவையின் மழைக்கால கூட்டத்தொடர் கடந்த செவ்வாய்கிழமை தொடங்கியது. முதல்நாளில் இரங்கல் தீர்மானம் நிறைவேற்றப்பட்டதையடுத்து, அன்றைய தினம் கூட்டம் ஒத்திவைக்கப்பட்டது. அடுத்த நாள் புதன்கிழமை, பேரவை மீண்டும் கூடியது.
இதற்கிடையில், இருமொழிக் கொள்கையை வலியுறுத்தும் வகையில், “தமிழ்நாடு அரசு இந்தி மொழிக்கு தடை விதிக்கும் மசோதாவை தாக்கல் செய்ய இருக்கிறது” என்ற தகவல் சமூக ஊடகங்களில் வேகமாக பரவியது.
அந்த தகவலை அடிப்படையாகக் கொண்டு, பாஜக முன்னாள் மாநிலத் தலைவர் அண்ணாமலை, தனது எக்ஸ் தள பதிவில், “ஆந்திரா முதல்வர் 15 பில்லியன் டாலர் மதிப்பிலான ஏஐ டேட்டா மைய ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டுள்ளார்; ஆனால் தமிழ்நாடு முதல்வர் இந்தியை தடை செய்யும் மசோதா கொண்டுவரப் பார்க்கிறார்” என பதிவு செய்திருந்தார்.
இந்த நிலையில், தமிழ்நாடு அரசின் தகவல் சரிபார்ப்பகம் அந்த செய்தியை முற்றிலும் தவறானது எனத் தெளிவுபடுத்தியுள்ளது.
அதன் எக்ஸ் தள பதிவில், “இந்தி மொழிக்கு தடை விதிக்கும் எந்தவொரு மசோதாவும் சட்டமன்றத்தில் தாக்கல் செய்யப்படவில்லை; இதுபற்றி எந்த முன்மொழிவும் பெறப்படவில்லை” என சட்டப்பேரவை செயலர் விளக்கம் அளித்துள்ளதாக தகவல் சரிபார்ப்பகம் தெரிவித்துள்ளது.
அதாவது, சமூக ஊடகங்களில் பரவிய “இந்தி தடை மசோதா” செய்தி வதந்தி மட்டுமே என்பதையும் அதிகாரப்பூர்வமாக மறுக்கப்பட்டுள்ளது.