அறுவடைக்குத் தயாரான மக்காச்சோளப் பயிர்களைக் சூறையாடும் காட்டுப்பன்றிகள்

திண்டுக்கல் மாவட்டம் ஒட்டன்சத்திரம் சட்டமன்றத் தொகுதிக்குட்பட்ட சத்திரப்பட்டி அருகே உள்ள ராமபட்டினம் புதூர் தெற்கு கோம்பை பகுதியில், காட்டுப்பன்றிகளின் அட்டூழியம் நாளுக்கு நாள் அதிகரித்து வருவது விவசாயிகளிடையே பெரும் கலக்கத்தை ஏற்படுத்தியுள்ளது. இப்பகுதியைச் சேர்ந்த விவசாயி மலையப்பா மற்றும் அவரது மகன் துரைசாமி ஆகியோர் கடந்த 35 ஆண்டுகளுக்கும் மேலாக விவசாயத் தொழிலில் ஈடுபட்டு வருகின்றனர். இவர்கள் தங்களுக்குச் சொந்தமான நான்கு ஏக்கர் நிலத்தில் பெரும் முதலீடு செய்து மக்காச்சோளம் பயிரிட்டிருந்தனர். பயிர்கள் அனைத்தும் செழிப்பாக வளர்ந்து, இன்னும் ஒரே வாரத்தில் அறுவடைக்குத் தயாராக இருந்த நிலையில், எதிர்பாராத விதமாக ஏற்பட்ட காட்டுப்பன்றிகளின் தாக்குதலால் அவர்களின் ஒட்டுமொத்த உழைப்பும் வீணாகியுள்ளது.

நேற்று அதிகாலை சுமார் 13-க்கும் மேற்பட்ட காட்டுப்பன்றிகள் கூட்டமாக விளைநிலத்திற்குள் புகுந்து, அறுவடைக்குக் காத்திருந்த மக்காச்சோளப் பயிர்களைக் கடித்தும், மிதித்தும் சூறையாடியுள்ளன. இதனால் சுமார் 20 மூட்டைகள் வரையிலான மக்காச்சோள விளைச்சல் முற்றிலும் நாசமாகியுள்ளதாகப் பாதிக்கப்பட்ட விவசாயிகள் வேதனையுடன் தெரிவிக்கின்றனர். இதுகுறித்து வனத்துறையினருக்குப் பலமுறை புகார் அளித்தும், அவர்கள் நேரில் வந்து பார்வையிட்டுச் செல்கிறார்களே தவிர, காட்டுப்பன்றிகளின் ஊடுருவலைத் தடுக்க நிரந்தரமான எந்த ஒரு நடவடிக்கையும் எடுக்கவில்லை என்பது இப்பகுதி மக்களின் நீண்டகாலக் குற்றச்சாட்டாக உள்ளது.

காட்டுப்பன்றிகள் கூட்டம் கூட்டமாக ஊருக்குள் உலா வருவதால், அதிகாலை மற்றும் இரவு நேரங்களில் விளைநிலங்களுக்குச் செல்லவும், பொதுமக்கள் வீட்டை விட்டு வெளியே வரவும் அச்சப்படுகின்றனர். பயிர்க் காப்பீடு மற்றும் இழப்பீடு வழங்குவதில் உள்ள சிக்கல்களுக்கு இடையே, வனவிலங்குகளால் ஏற்படும் இத்தகைய சேதங்கள் விவசாயிகளை மேலும் கடன் சுமைக்குத் தள்ளுகின்றன. எனவே, தமிழக அரசு மற்றும் வனத்துறை உடனடியாகத் தலையிட்டு, விளைநிலங்களுக்குள் காட்டுப்பன்றிகள் வராமல் தடுக்கத் தகுந்த வேலி அமைத்தல் அல்லது மாற்றுத் திட்டங்களைச் செயல்படுத்த வேண்டும் என்றும், பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு உரிய நஷ்டஈடு வழங்க வேண்டும் என்றும் இப்பகுதி விவசாயிகள் மற்றும் பொதுமக்கள் ஒருமித்த கோரிக்கை விடுத்துள்ளனர்..

Exit mobile version