டெல்லி : உள்துறை அமைச்சர் அமித் ஷாவைச் சந்தித்ததற்கான காரணத்தை அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி கே. பழனிசாமி விளக்கமளித்துள்ளார்.
அடுத்தாண்டு நடைபெறவுள்ள தமிழ்நாடு சட்டப்பேரவைத் தேர்தலை முன்னிட்டு, அதிமுக-பாஜக கூட்டணி தொடர்பான ஆலோசனைகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன. சமீபத்தில் மூத்த அதிமுக தலைவர் செங்கோட்டையன், பிரிந்து சென்றவர்களை மீண்டும் ஒன்றிணைக்க வேண்டும் எனக் கோரிக்கை வைத்திருந்தார். இதனையடுத்து, பழனிசாமி டெல்லி சென்று உள்துறை அமைச்சர் அமித் ஷாவைச் சந்தித்து ஆலோசனை நடத்தினார்.
சந்திப்பில், தமிழக அரசியல் நிலவரம், கூட்டணி விவகாரம் மட்டுமல்லாது, டிடிவி தினகரன், ஓ.பன்னீர்செல்வம் உள்ளிட்டோரைப் பற்றியும் பேச்சுவார்த்தை நடைபெற்றதாகக் கூறப்படுகிறது. அதிமுக நிர்வாகிகள் வெளியேறிய பிறகு, பழனிசாமி மற்றும் அமித் ஷா மட்டும் தனிப்பட்ட முறையில் சில நிமிடங்கள் ஆலோசனை மேற்கொண்டனர். மேலும், திமுக அமைச்சர்கள் மீதான அமலாக்கத்துறை வழக்குகளின் விசாரணையை விரைவுபடுத்த வேண்டும் எனவும் கோரிக்கை வைக்கப்பட்டதாக தகவல்கள் வெளியாகின.
இந்நிலையில், அமித் ஷாவைச் சந்தித்ததற்கான காரணத்தை விளக்கி எக்ஸ் தளத்தில் பதிவு வெளியிட்டுள்ள பழனிசாமி, “தேச விடுதலைக்காக பாடுபட்ட தெய்வத் திருமகனார் பசும்பொன் முத்துராமலிங்க தேவருக்கு நாட்டின் உயரிய விருதான பாரத ரத்னா விருது வழங்க வேண்டும் என அதிமுக சார்பில் கோரிக்கை வைத்தேன்” எனத் தெரிவித்தார்.
இதனுடன், சந்திப்பின் உண்மையான நோக்கம் குறித்து ஏற்பட்டிருந்த அரசியல் சர்ச்சைகளுக்கு பழனிசாமி விளக்கம் அளித்ததாகக் கூறப்படுகிறது.