தமிழ்நாடு பாஜக சென்னை கிழக்கு மாவட்டம் சார்பாக மத்திய அரசின் மக்கள் நலத்திட்டங்களை விளக்கும் சிறப்பு முகாம் நடத்தப்பட்டது. இந்த நிகழ்ச்சியில் பாஜக முன்னாள் மாநிலத் தலைவர் மற்றும் முன்னாள் ஆளுநர் தமிழிசை சௌந்தரராஜன் கலந்து கொண்டு முகாமை தொடங்கி வைத்தார்.
பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அவர், தவெக கட்சி நடத்திய அண்மைய ஆர்ப்பாட்டத்தை விமர்சித்து, “எஸ்.ஐ.ஆர். தொடர்பாக ஆர்ப்பாட்டம் நடத்த வேண்டிய அவசியமே இல்லை. வரைவு வாக்காளர் பட்டியல் வெளியான பிறகும் திருத்தங்களுக்கு நேரம் உள்ளது. தூய்மைப்படுத்தப்பட்ட பட்டியல் கிடைத்த பிறகு பேசலாம்,” என்று தெரிவித்தார்.
உதயநிதியின் கருத்தை எதிர்த்து பேசிய தமிழிசை, “திருடர்களுக்குத்தான் காவல்துறையைப் பார்த்து பயம் வரும் என்று உதயநிதி கூறியிருக்கிறார். அப்படியென்றால் எஸ்.ஐ.ஆர். பார்த்து ஏன் பயப்படுகிறீர்கள்? ஓட்டு திருடுவதே காரணம்,” என குற்றம்சாட்டினார்.
அதேபோல் காங்கிரஸ் கட்சியைத் திட்டவட்டமாக விமர்சித்த அவர், பீகார் தேர்தல் முடிவை உதாரணமாகக் கூறினார்.
“வாக்குகள் திருடப்பட்டன என ராகுல் காந்தி கூறிக்கொண்டே இருந்தார். ஆனால் பீகார் மக்கள் ‘எங்கள் ஓட்டு எங்களிடமே இருக்கிறது’ என்று நிரூபித்தனர். அதற்காகவே காங்கிரஸுக்கு வெறும் ஆறு இடங்கள் மட்டுமே கிடைத்தது. இதுவே ராகுல் காந்திக்கு கிடைத்த மரண அடி,” என்றார்.
ஸ்டாலினின் கருத்துகளையும் குறிவைத்து தமிழிசை, “பீகார் தேர்தலுக்குப் பிறகு பல பாடங்களை கற்றோம் என ஸ்டாலின் கூறியுள்ளார். காங்கிரஸுடன் இருந்தால் கூட்டணியே முழ்கிவிடும் என்பதையும் ஒரு பாடமாக எடுத்துக்கொள்ள வேண்டும்,” என்று தெரிவித்தார்.
வருவாய் துறை ஊழியர்கள் எஸ்.ஐ.ஆர். பணி மேற்கொள்ள முடியாது என எதிர்ப்பு தெரிவிப்பது குறித்து அவர், “இதுபோன்ற போராட்டங்களை மாநில அரசு மறைமுகமாக ஊக்குவிக்கிறது. அரசு ஊழியர்கள் தேர்தல் ஆணையத்திற்கு உதவுவது அவர்களின் கடமை,” எனக் கூறினார்.
தமிழக அரசியல் நிலைமை குறித்தும் கருத்து தெரிவித்த தமிழிசை, “இங்கே போட்டி இந்தி கூட்டணி – தேசிய ஜனநாயக கூட்டணி இடையே தான். ஆனால் விஜய் கூறுவது போல தவெக – திமுக இடையே போட்டி இல்லை. திமுக கூட்டணியில்தான் உள்ளது. எனவே கூட்டணிகளுக்கிடையேவே உண்மையான போட்டி,” என்றார். மேலும், “பிரசாந்த் கிஷோரிடம் அறிவுரை கேட்ட விஜய், இன்னும் சில பாடங்கள் கற்றுக்கொள்ள வேண்டும்,” என அவர் விமர்சித்தார்.



















