காவலர்களை சொந்த ஊரில் பணியாற்ற அனுமதிப்பது ஏன்? தமிழக அரசுக்கு ஐகோர்ட்டு கேள்வி

கன்னியாகுமரி மாவட்டம் கல்குளம் பகுதியைச் சேர்ந்த ஹோமர்லால், மதுரை ஐகோர்ட்டில் தாக்கல் செய்த மனு,
கன்னியாகுமரி மாவட்டத்தில் பல்வேறு கொலை வழக்குகள், பெரிய குற்றச்செயல்களில் ஈடுபட்ட குற்றவாளிகள் பல ஆண்டுகளாக கைது செய்யப்படவில்லை.

இதன் காரணமாக கன்னியாகுமரி மாவட்டத்தில் தற்போது குற்றச்சம்பவங்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. இதற்கு முக்கிய காரணம், கன்னியாகுமரி மாவட்ட காவல்துறையில் பணிபுரியும் போாலீஸ் அதிகாரிகளில் பெரும்பாலானவர்கள், குற்றவாளிகள் பலருக்கு உறவினர்கள் மற்றும் நண்பர்கள் ஆவர்.

இந்த மாவட்டத்தில் நடக்கும் பல்வேறு குற்றச்சம்பவங்களுக்கு போலீசார் சொந்த ஊரில் நீண்டநாளாக பணியாற்றுவதுதான் காரணம். இதுதொடர்பாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என ஓய்வு பெற்ற நீதிபதி அரசுக்கு ஏற்கனவே அரசுக்கு பரிந்துரை செய்தார்.

அதன்படி சொந்த ஊரில் பணியாற்றும் போலீசாரை இடமாற்றம் செய்வது தொடர்பாக அரசாணை பிறப்பிக்கப்பட்டது. ஆனால் அந்த அரசாணை முறையாக அமல்படுத்தப்படவில்லை.

இதனால் இப்போதும் இந்த மாவட்ட காவல்துறையில் பணியாற்றும் பலர் சொந்த ஊரை சேர்ந்தவர்கள். எனவே அரசாணையை முறையாக அமல்படுத்தி போலீசாரை இடமாற்றம் செய்ய உத்தரவிட வேண்டும்.இவ்வாறு மனுவில் கூறியிருந்தார்.

இந்த வழக்கு நீதிபதிகள் எஸ்.எம்.சுப்பிரமணியம், ஸ்ரீமதி ஆகியோர் முன்பு நேற்று விசாரணைக்கு வந்தது.
அப்போது, காவல்துறையை சேர்ந்தவர்கள் நீண்டநாளாக சொந்த ஊரில் எதன் அடிப்படையில் பணியாற்ற அனுமதிக்கப்படுகிறார்கள்? என நீதிபதிகள் கேள்வி எழுப்பினர்.

விசாரணை முடிவில், இதுதொடர்பான அரசாணை முழுமையாக அமல்படுத்தப்பட்டு உள்ளதா? என்பது குறித்து தமிழக அரசின் தலைமைச் செயலாளர், உள்துறை செயலாளர் உள்ளிட்ட அதிகாரிகள் பதில் அளிக்க வேண்டும் என்று நீதிபதிகள் உத்தரவிட்டு, அடுத்தகட்ட விசாரணையை வருகிற 21-ந்தேதிக்கு ஒத்திவைத்தனர்.

Exit mobile version