குடியரசுத் துணைத் தலைவர் வேட்பாளர் யார் ? – டெல்லியில் ‘இந்தியா’ கூட்டணிக் கட்சிகள் தீவிர ஆலோசனை

குடியரசுத் துணைத் தலைவர் தேர்தலை முன்னிட்டு, ‘இந்தியா’ கூட்டணிக் கட்சிகள் வேட்பாளர் குறித்து டெல்லியில் ஆலோசனை நடத்தின.

குடியரசுத் துணைத் தலைவராக இருந்த ஜெகதீப் தன்கர் கடந்த மாதம் 21ஆம் தேதி தனது பதவியிலிருந்து ராஜினாமா செய்தார். இதையடுத்து தேர்தல் ஆணையம் புதிய துணைத் தலைவர் தேர்வுக்கான தேர்தலை அறிவித்துள்ளது. போட்டி நிலவினால் வரும் செப்டம்பர் 9ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெறும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்தத் தேர்தலில் பாஜக கூட்டணிக் கட்சிகள் சார்பில் தமிழ்நாட்டைச் சேர்ந்தவரும், தற்போது மகாராஷ்டிர மாநில ஆளுநருமான சி.பி. ராதாகிருஷ்ணன் வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ளார். இதேவேளை, அவருக்கு எதிராக வேட்பாளரை நிறுத்துவது குறித்து ‘இந்தியா’ கூட்டணிக் கட்சிகள் பரிசீலனை செய்து வருகின்றன.

வேட்புமனுத் தாக்கல் செய்ய இன்னும் மூன்று நாட்களே உள்ள நிலையில், இன்று நாடாளுமன்ற வளாகத்தில் எதிர்க்கட்சித் தலைவர் மல்லிகார்ஜூன கார்கே தலைமையில் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. இதில் காங்கிரஸ் பொதுச்செயலாளர் கே.சி. வேணுகோபால், திமுக நாடாளுமன்றக் குழுத் தலைவர் கனிமொழி, எம்.பி. திருச்சி சிவா உள்ளிட்டோர் பங்கேற்றனர். துணைத் தலைவர் தேர்தலுக்கான வேட்பாளர் குறித்து இக்கூட்டத்தில் விரிவாக கலந்துரையாடப்பட்டது. தொடர்ந்து இன்று மாலையும் கூட்டணி கட்சிகள் மீண்டும் ஆலோசனை நடத்த உள்ளன.

இதனிடையே, மத்திய உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங், தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலினை தொலைபேசியில் தொடர்பு கொண்டு, சி.பி. ராதாகிருஷ்ணனுக்கு ஆதரவு அளிக்குமாறு கேட்டுக்கொண்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. மேலும், காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜூன கார்கே உள்ளிட்ட எதிர்க்கட்சித் தலைவர்களையும் ராஜ்நாத் சிங் தொடர்பு கொண்டு ஆதரவு கோரியதாகவும் கூறப்படுகிறது.

Exit mobile version