வாடிகன்:
கத்தோலிக்க திருச்சபையின் தலைமை மதகுருவாக பணியாற்றிய போப் பிரான்சிஸ் (வயது 88) காலமானதைத் தொடர்ந்து, அவரது இடத்தை நிரப்பும் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன.
இந்தநிலையில், புதிய போப்பை தேர்வு செய்யும் கார்டினல்கள் மாநாடு வாடிகனில் உள்ள புகழ்பெற்ற சிஸ்டைன் தேவாலயத்தில் நேற்று தொடங்கியது. உலகம் முழுவதும் உள்ள 252 கார்டினல்களில், 80 வயதிற்கு குறைவான 136 பேருக்கு வாக்களிக்கும் உரிமை உள்ள நிலையில், தற்போது 133 கார்டினல்கள் வாக்கெடுப்பில் பங்கேற்றுள்ளனர்.
புதிய போப்பை தேர்வு செய்ய மூன்றில் இரண்டு பங்குக்கு ஓட்டுகள் பெற வேண்டும். நேற்று நடைபெற்ற முதல்கட்ட வாக்கெடுப்பில் யாருக்கும் அவ்வளவு பெரும்பான்மை கிடைக்காததால், தேவாலய புகைக்கூண்டிலிருந்து கரும் புகை வெளியேற்றப்பட்டது. இதனால் செயிண்ட் பீட்டர்ஸ் சதுக்கத்தில் காத்திருந்த ஆயிரக்கணக்கான மக்கள் ஏமாற்றமடைந்தனர்.
இன்று நடைபெற்ற இரண்டாவது வாக்கெடுப்பிலும் முடிவு எட்டப்படாததால் மீண்டும் கரும்புகை வெளியேறியது. பிற்பகலில் கார்டினல்கள் மீண்டும் ரகசிய வாக்கெடுப்பில் பங்கேற்றனர். அதில், போப்பாக ஒருவருக்கு பெரும்பான்மை வாக்குகள் கிடைத்ததாகவும், இதற்கான அறிகுறியாக வெள்ளைப் புகை வெளியேறியதாகவும் அறிவிக்கப்பட்டது.
புதிய போப்பின் பெயர் விரைவில் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. குறிப்பிடத்தக்க விஷயமாக, கடைசி ஐந்து போப்புகளில் மூன்று பேர் மாநாட்டின் இரண்டாவது நாளில் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளனர்.