எம்ஜிஆர் யார் தெரியும்ல.., முதன்முறையாக அதிமுக-வை விமர்சித்த விஜய்..!

மதுரையில் நடைபெற்ற 2ஆவது மாநில மாநாட்டில் பேசிய த.வெ.க. தலைவர் விஜய், கொள்கை எதிரி பாஜக அரசியல் எதிரி திமுக என்பதை மீண்டும் திட்டவட்டமாக உறுதியாக தெரிவித்தார். தவெக-வுக்கும் திமுக-வுக்கும் எதிராகத்தான் போட்டி. 234 தொகுதிகளிலும் விஜய் முகம்தான் வேட்பாளர் எனத் தெரிவித்தார்.

விக்கிரவாண்டியில் நடைபெற்ற முதல் மாநில மாநாட்டில் திமுக மற்றும் பாஜக ஆகிய கட்சிகளை கடுமையாக விமர்சித்தார். ஆனால் அதிமுக-வை விமர்சிக்கவில்லை. இதனால் அதிமுக உடன் கூட்டணி வைக்க வாய்ப்புள்ளதாக அரசியல் விமர்சகர்கள் தொடர்ந்து தெரிவித்து வந்தனர்.

இந்த நிலையில் மதுரையில் நடைபெற்ற 2ஆவது மாநில மாநாட்டில் அதிமுக கட்சியை கடுமையாக விமர்சித்தார். அதிமுக குறித்து விஜய் பேசியதாவது:-

மக்களுடைய அன்பும், ஆசியும் நம்முடன் இருக்கும்போது பாசிச பாஜக உடன் மறைமுக, நேரடி கூட்டணி எதுக்குங்க… நாம் உலக மகா ஊழ்ல் கட்சியா என்ன?… மக்கள் சக்தியே நம்முடன் அணியா அணியா திரண்டு இருக்கும்போது இந்த அடிமை கூட்டணியில் சேர வேண்டிய அவசியம் நமக்கு எதுக்குங்க.

நம்முடைய கூட்டணி சுயமரியாதை கூட்டணியாக இருக்கும். ஒரு பக்கம் ஆர்எஸ்எஸ்-க்கு அடிபணிந்து கொண்டு, மறுபக்கம் மதசார்பற்ற கூட்டணி என ஏமாற்றிக் கொண்டு இருப்பதுபோல் நம்ம கூட்டணி இருக்காது.

நம்மை நம்பி வருபவர்களுக்கு ஆட்சியிலும், அதிகாரத்திலும் பங்கு அளிக்கப்படும். அப்படி என்றால் யார் கூட்டணிக்கு வருகிறார்கள் என்ற கேள்வி வரும். அதற்கெல்லாம் சஸ்பென்ஸ் உடன் சஞ்சாரம் செய்யுங்கள்.

“எதிர்காலம் வரும். என் கடமை வரும். இந்த கூட்டத்தின் ஆட்டத்தை ஒழிப்பேன்” என்ற எம்.ஜி.ஆர். பட பாடலை படித்தார்.

எம்ஜிஆர் யார் தெரியும்ல… அவரது மாஸ்னா என்னதுன்னு தெரியும்ல… அவர் உயிரோடு இருக்கும் வரைக்கும் முதலமைச்சர் சீட் குறித்து யாராலும் நினைத்துக்கூட பார்க்க முடியல… கனவு கூட காண முடியல…

எப்படியாவது முதலமைச்சர் பதவியை தன்னிடம் கொடுங்கள். எம்.ஜி.ஆர். வந்த உடன் அவரிடம் கொடுக்கிறேன் என தன்னுடைய எதிரியையும் கெஞ்ச வைத்தவர். கெஞ்ச வைத்தவர். அதனால்…

சிறிது நேரம் பேச்சை நிறுத்தி, ஆனா இப்போ அவர் ஆரம்பித்த அந்த கட்சியை, கட்டிக்காக்கிறது யார்?. அந்த கட்சி இப்போ எப்படி இருக்கிறது. நான் சொல்லிதான் உங்களுக்கு தெரியனுமா என்ன?. அப்பாவி தொண்டர்கள் வேதனையை வெளியே சொல்ல முடியாமல் தவிக்கிறார்கள்.

2026 சட்டமன்ற தேர்தலில் யாருக்கு வாக்கு போடனும், எப்படிபட்ட ஆட்சி அமையனும் அந்த அப்பழுக்கற்ற தொண்டர்களுக்கு நன்றாகவே தெரியும். அதனால் பாஜக என்ன வேசம் போட்டு வந்தாலும், தமிழ்நாட்டில் அவர்கள் வித்தை வேலைக்கு ஆகாது.

இவ்வாறு விஜய் பேசினார்.

Exit mobile version