சென்னை : செங்கல்பட்டு மாவட்டம் திருப்போரூர் அருகே அமைக்கப்படும் சென்னை வொண்டர்லா பொழுதுபோக்கு பூங்கா இந்த ஆண்டு இறுதியில் மக்கள் பயன்பாட்டுக்கு வர உள்ளது. 65 ஏக்கர் பரப்பளவில் அமைக்கப்பட்ட இந்த பூங்காவிற்கு ரூ. 510 கோடி முதலீடு செய்யப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.
இந்த பொழுதுபோக்கு பூங்காவில் மொத்தம் 52 சவாரிகள் இருக்கும்; இதில் 16 நீர் சவாரிகள் மற்றும் 10 சிறுவர் சவாரிகள் அடக்கம். பெரியவர்கள் விளையாடும் 42 சவாரிகளுக்கு தனி இடம் அமைக்கப்பட்டுள்ளது. மேலும், உலக புகழ்பெற்ற Bolliger & Mabillard ரோலர் கோஸ்டர் இங்கு அமைக்கப்பட்டுள்ளது. இது லண்டன், நியூயார்க் போன்ற பெரிய நகரங்களில் உள்ள ரோலர் கோஸ்டர்களுக்கு ஒப்பானது. இதற்கு மட்டும் ரூ. 75–80 கோடி செலவு செய்யப்பட்டதாக தெரிகிறது.
வொண்டர்லா பூங்கா டிசம்பர் மாதத்தின் இரண்டாம் வாரம் கிறிஸ்துமஸ் மற்றும் புத்தாண்டை முன்னிட்டு திறக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. பொதுவான வாடிக்கையாளர்களுக்கான கட்டணத்தில் பெரும்பாலான சவாரிகள் அடங்கும்; ஆனால் சில பிரத்யேக சவாரிகளுக்கு தனி கட்டணம் வசூலிக்கப்படும்.
சென்னையில் இந்த புதிய வொண்டர்லா பூங்கா திறக்கும் மூலம், குழந்தைகள் முதல் பெரியவர்களும் கோடை விடுமுறை மற்றும் வார இறுதி காலங்களில் ஒரு நாள் முழுமையாக பொழுதுபோக்கை அனுபவிக்கலாம். இந்தியாவின் ஹைதராபாத், பெங்களூர், கொச்சி, புவனேஸ்வர் போன்ற நகரங்களில் செயல்பட்டு மக்களின் விருப்பத்தை பெற்ற வொண்டர்லா, சென்னையிலும் மக்கள் எதிர்பார்ப்பை நிறைவேற்றும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

















