தஞ்சாவூர் : 2026 சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு தமிழக அரசியல் சூழல் பரபரப்பாகி வரும் நிலையில், அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் செய்தியாளர்களின் கேள்வியால் பதறிய சம்பவம் தஞ்சாவூரில் நடந்துள்ளது.
திமுக கூட்டணி வலுவாக செயல்பட்டு வரும் நிலையில், அதிமுக–பாஜக கூட்டணியில் சில கட்சிகள் மட்டுமே உள்ளன. முன்னாள் முதல்வர் ஓ. பன்னீர்செல்வம் மற்றும் அமமுகவின் தினகரன் ஆகியோர் அந்த கூட்டணியில் இருந்து விலகியுள்ளனர். தவெக தலைவர் விஜய் கூட்டணியில் பங்கு கொள்வார் என சிலர் எதிர்பார்க்கும் நிலையில், தினகரன் மற்றும் ஓபிஎஸ் தவெகவுடன் இணைவார்களா என்ற கேள்வியும் எழுந்துள்ளது.
இந்நிலையில் தஞ்சாவூரில் செய்தியாளர்களை சந்தித்த தினகரன், “அமமுகவின் நிலைப்பாட்டை பலமுறை கூறிவிட்டேன். திரும்பியும் அரைத்த மாவை அரைக்க முடியாது. இந்த முறை அமமுக இடம்பெறும் கூட்டணி வெற்றி பெற்று ஆட்சியமைக்கும் என்பதை உறுதியாக சொல்லிக் கொள்கிறேன். அதை ஆணவத்திலோ அகங்காரத்திலோ அல்ல, நம்பிக்கையோடு தான் கூறுகிறேன்,” என்றார்.
அப்போது, ஒரு செய்தியாளர் “ஜெயலலிதா பாணியில் விஜய் பயணிக்கிறார் என்று நீங்கள் சொன்னீர்களே?” என்று கேள்வி எழுப்பியபோது தினகரன் சற்று பதற்றமடைந்தார். உடனே அவர், “நான் எப்பங்க அப்படி சொன்னேன்? நான் அப்படிச் சொல்லவே இல்லை. ஒரு செய்தியாளர் ஜெயலலிதா பாணியில் விஜய் பயணிக்கிறார் என்று கேட்டபோது, ஜெயலலிதா பாணியைப் பின்பற்றுவது எங்களுக்கு பெருமை தான் என்று தான் பதிலளித்தேன். நீங்களாக ஒன்றை உருவாக்க வேண்டாம்,” என தெளிவுபடுத்தினார்.
மேலும், “எல்லா கட்சிகளும் தங்கள் வாக்குவங்கியை உயர்த்திக் காட்டுவார்கள். நானும் கூட அமமுக இடம்பெறும் கூட்டணி வெற்றி பெறும் என்று உறுதியாகச் சொல்கிறேன். பழனிசாமியை முதலமைச்சர் வேட்பாளராக ஏற்றுக்கொள்வதற்கு வாய்ப்பே இல்லை என்று ஏற்கனவே தெரிவித்துவிட்டோம். விஜயின் வருகையால் தேர்தலில் என்ன மாற்றம் நிகழும் என்பதை நான் கணிக்க முடியாது. அதை அரசியல் வல்லுநர்களே கூற வேண்டும். ஆனால், வரவிருக்கும் தேர்தல் முடிவுகள் அமமுகவின் வலிமையை உறுதிப்படுத்தும்,” என்று தினகரன் வலியுறுத்தினார்.
















