திருச்சி பீமநகர் காவலர் குடியிருப்பில், எஸ்.எஸ்.ஐ. வீட்டில் தஞ்சம் அடைந்த தாமரைசெல்வன் என்ற இளைஞர் கொலை செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்தச் சம்பவத்தில் தொடர்புடையவர்களை காவல்துறை கைது செய்துள்ளது.
இந்தச் சம்பவத்தைத் தொடர்ந்து, எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி கே. பழனிசாமி தனது எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டுள்ளதாவது :
“திருச்சி பீமநகரில் கொலையாளிகளால் விரட்டப்பட்டு, காவலர் குடியிருப்பில் தஞ்சம் புகுந்த தாமரைசெல்வன் வெட்டிக் கொலை செய்யப்பட்டிருப்பது அதிர்ச்சியளிக்கிறது. ‘ஸ்டாலின் மாடல்’ என்றால் என்ன? என்ற கேள்விக்கு நாளுக்கு நாள் நடக்கும் கொலைகளே பதிலாகின்றன. காவலர் குடியிருப்புக்குள் புகுந்து தாக்கும் அளவிற்கு குற்றவாளிகளுக்கு காவல்துறையின் மீது பயம் இல்லாமல் போனது வருந்தத்தக்கது.”
“காவலர் குடியிருப்புக்குள் தஞ்சம் புகுந்த நபருக்கே பாதுகாப்பு இல்லாத நிலை ஏற்பட்டுள்ளது. இதை முதல்வர் எவ்வாறு விளக்கப் போகிறார்? காவல்துறைக்கு பொறுப்பான அமைச்சராக இருக்கும் மு.க. ஸ்டாலின் இதற்கு வெட்கப்பட வேண்டும். மக்களை காக்கும் பொறுப்பு அவருக்கு உள்ளதா? மேடைகளில் அரசியல் குற்றச்சாட்டுகள் கூறுவதில் காட்டும் உற்சாகத்தை, சட்டம் ஒழுங்கை நிலைநிறுத்துவதிலும் காட்டியிருக்க வேண்டியது அவசியம்.”
இறுதியாக, “இந்தச் சம்பவத்தில் குற்றவாளிகளை கடுமையாக தண்டிக்க வேண்டும். சட்டம் ஒழுங்கில் தோல்வியடைந்தது ஸ்டாலின் மாடல் அரசு என்பதை மீண்டும் நிரூபித்துள்ளது,” என எடப்பாடி பழனிசாமி பதிவிட்டுள்ளார்.


















