கோவை : திமுக அரசு மீது ஒட்டுமொத்த தமிழ் சமூகமும் கடும் அதிருப்தியுடன் இருப்பதாக அ.தி.மு.க. பொதுச்செயலாளர் எடப்பாடி கே. பழனிசாமி குற்றம்சாட்டியுள்ளார். கோவையில் நடைபெற்ற சுற்றுப் பயணத்தின் பின்னர் அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் பல்வேறு கோரிக்கைகள் மற்றும் குற்றச்சாட்டுகளை முன்வைத்துள்ளார்.
“அரசு ஊழியர்களுக்கு பழைய பென்ஷன் திட்டம் மீண்டும் கொண்டு வரப்படும் என திமுக தேர்தல் அறிக்கையில் வாக்குறுதி அளித்தது. ஆனால் அந்த வாக்குறுதி இன்றுவரை நிறைவேற்றப்படவில்லை,” என அவர் விமர்சித்தார்.
மேலும், மின்கட்டண உயர்வுகள், வரி சுமைகள், நிர்வாக சீர்கேட்டுகள் போன்றவை மக்கள் வாழ்வை மோசமாக பாதித்துள்ளதாக கூறினார். “திமுக ஆட்சியின் மோசமான நிர்வாகத்தால் தமிழகத்தில் ஒட்டுமொத்த தமிழ் சமூகமும் கோபமாக உள்ளது,” என்றும் அவர் கூறினார்.
2026 ஆம் ஆண்டு சட்டப்பேரவைத் தேர்தலையொட்டி, “தமிழகத்தில் தற்போது நிலவும் இருண்ட காலத்தை மாற்றி, பொற்காலத்தை மீண்டும் கொண்டு வருவேன். ஸ்டாலின் தலைமையிலான அரசின் கடன்சுமையை மக்கள் நன்கு உணர்ந்துள்ளனர். அ.தி.மு.க. மக்கள் பேராதரவுடன் மீண்டும் ஆட்சிக்கு வருவது உறுதி,” என அவர் நம்பிக்கை தெரிவித்தார்.
