தேனி மாவட்டத்தின் முக்கியத் தொழில் அடையாளமான காட்டன் சேலை உற்பத்தி, 2026-ஆம் ஆண்டுப் பிறப்பின் தொடக்கத்திலேயே பெரும் எழுச்சியைக் கண்டுள்ளது. ஆண்டிபட்டி அருகே உள்ள சக்கம்பட்டி, டி.சுப்புலாபுரம் மற்றும் முத்துகிருஷ்ணாபுரம் ஆகிய கிராமங்களில் உள்ள 2 ஆயிரத்திற்கும் மேற்பட்ட விசைத்தறிகளில் நவீன டிசைன்களுடன் கூடிய காட்டன் ரக சேலைகள் முழுவீச்சில் உற்பத்தி செய்யப்பட்டு வருகின்றன. 60 மற்றும் 80-ஆம் நம்பர் மென்மையான நூல்களைக் கொண்டு பல வண்ணங்களில் நெசவு செய்யப்படும் இந்த ‘நைஸ் ரக’ காட்டன் சேலைகளை அணிவதில் பெண்கள் மத்தியில் ஆர்வம் அதிகரித்துள்ளதே இந்த விற்பனை உயர்வுக்கு முக்கியக் காரணமாகும். இங்கு உற்பத்தியாகும் சேலைகள் தமிழகத்தின் அனைத்து மாவட்டங்களுக்கும் மட்டுமின்றி, அண்டை மாநிலங்களான ஆந்திரா மற்றும் கர்நாடகாவிற்கும் லாரிகள் மூலம் விற்பனைக்கு அனுப்பப்பட்டு வருகின்றன.
வழக்கமாகத் தீபாவளி பண்டிகை முடிந்ததுமே ஜவுளிச் சந்தையில் ஒருவித மந்தநிலை ஏற்பட்டு, உற்பத்தி செய்யப்பட்ட சேலைகள் தேக்கமடைவது வழக்கம். ஆனால், இந்த ஆண்டு நிலைமை தலைகீழாக மாறியுள்ளது. தீபாவளியில் தொடங்கிய விற்பனை விறுவிறுப்பு குறையாமல் தொடர்வதால், தற்போது உற்பத்தியாளர்களிடம் பழைய இருப்பு (Stock) ஏதும் இல்லாத சூழல் உருவாகியுள்ளது. இதனால் நெசவாளர்கள் மகிழ்ச்சியுடன் புதிய உற்பத்தியைத் தொடங்கியுள்ளனர். இந்தத் தொழிலில் ஈடுபட்டுள்ள கூலி நெசவாளர்களுக்கு நாள் ஒன்றுக்கு 500 முதல் 700 ரூபாய் வரையிலும், ஒப்பந்த அடிப்படையில் பணிபுரிபவர்களுக்கு 1000 ரூபாய் வரையிலும் வருவாய் கிடைப்பதால், அவர்களது வாழ்வாதாரம் மேம்பட்டுள்ளது. சொந்தமாகத் தறி வைத்துள்ளவர்கள் சந்தை தேவையைக் கருதி உற்பத்திக்கான இலக்கை இருமடங்காக அதிகரித்துள்ளனர்.
இது குறித்து ஜவுளி உற்பத்தியாளர்கள் கூறுகையில், இப்பகுதியில் தினமும் 5 ஆயிரத்திற்கும் அதிகமான சேலைகள் உற்பத்தியாகின்றன. குறிப்பாகக் கோர்வை பேடு, கோர்வை புட்டா, செல்ப் டிசைன் மற்றும் பட்டுச் சேலைகளுக்கு இணையான பொலிவு தரும் ‘மெர்சிடஸ்’ ரகங்களுக்குத் தற்போது சந்தையில் ஏகோபித்த வரவேற்பு உள்ளது. தரம் மற்றும் டிசைனுக்கு ஏற்ப 500 முதல் 1500 ரூபாய் வரையிலான கட்டுப்படியாகும் விலையில் கிடைப்பதால், சில்லரை விற்பனை மையங்களிலும் கூட்டம் அலைமோதுகிறது. மேலும், பல இளைஞர்கள் ஆன்லைன் வர்த்தகம் மூலமாகவும் இந்தச் சேலைகளை விற்பனை செய்யத் தொடங்கியுள்ளனர். வழக்கமாகப் பிப்ரவரி, மார்ச் மாதங்களில் கோடை காலத்திற்காகத் தொடங்கும் காட்டன் சேலை விற்பனை, இந்த ஆண்டு முன்கூட்டியே ஜனவரியிலேயே சூடுபிடித்துள்ளதால், இந்த ஆங்கிலப் புத்தாண்டின் தொடக்கம் தேனி மாவட்ட நெசவுத் தொழிலாளர்களுக்குப் பெரும் பொருளாதார வளர்ச்சியைத் தந்துள்ளதாகத் தொழில்துறையினர் மகிழ்ச்சி தெரிவிக்கின்றனர்.
