தமிழ்நாடு நாளையொட்டி நடிகரும் தமிழக வெற்றிக் கழகத் தலைவருமான விஜய் வெளியிட்ட வாழ்த்துச் செய்தி, தமிழக அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சாதாரண வாழ்த்தாகத் தோன்றினாலும், அதில் இடம் பெற்ற கருத்துகள் திமுக அரசுக்கு எதிரான கடுமையான அரசியல் சைகையாகக் காணப்படுகின்றன.
தியாகிகளுக்கு வீர வணக்கம் :
தமிழ்நாடு உருவாகக் காரணமான வரலாற்றை நினைவு கூர்ந்த விஜய், தனது X பக்கத்தில், “தமிழ்நாடு உருவாகக் காரணமான எல்லைப் போராட்டத் தியாகிகளையும் ‘தமிழ்நாடு’ எனப் பெயர் சூட்டக் காரணமானவர்களையும் நினைவுகூர்வோம். அவர்களை எந்நாளும் போற்றுவோம்!” என்று பதிவு செய்துள்ளார். மேலும், மொழி வழி மாநிலம் உருவாகும் போராட்டத்தில் பங்காற்றிய மார்ஷல் ஏ. நெசமணி, சிலம்புச் செல்வர் ம.பொ.சி., சங்கரலிங்கனார் போன்ற மாவீரர்களை அவர் சிறப்பாக நினைவு கூர்ந்துள்ளார். தியாகிகளைப் போற்றிய விஜய்யின் இந்த பதிவு, தமிழ்மண்ணின் பெருமையை வெளிப்படுத்துவதாக த.வெ.க. தொண்டர்கள் பெருமிதம் தெரிவித்துள்ளனர்.
திமுக ஆட்சிக்கு நேரடி தாக்கு
விஜய்யின் பதிவில், அரசியல் வட்டாரத்தின் கவனத்தை ஈர்த்த முக்கிய பகுதி திமுக அரசை நோக்கியது. “மக்கள் விரோத திமுகவிடமிருந்து மக்கள் சக்தியின் துணையோடு தமிழ்நாட்டை மீட்போம்! 2026இல் உண்மையான மக்களாட்சியை அமைப்போம்!” என அவர் உறுதிமொழி எடுத்துள்ளார். இதன் மூலம், திமுக ஆட்சியை ‘மக்கள் விரோதமானது’ என குற்றம் சாட்டியுள்ள விஜய், வரவிருக்கும் சட்டமன்றத் தேர்தலை நோக்கி தன்னுடைய அரசியல் நிலைப்பாட்டை வெளிப்படையாகக் காட்டியுள்ளார்.
தமிழக வெற்றிக் கழகம் உருவான நோக்கம் 2026 சட்டமன்றத் தேர்தலில் மாற்றத்தை ஏற்படுத்துவதாக விஜய் ஏற்கனவே அறிவித்திருந்தார். இன்றைய வாழ்த்துச் செய்தி அந்த இலக்கை மீண்டும் வலியுறுத்துவதாகக் காணப்படுகிறது. “மக்கள் சக்தியின் துணையோடு உண்மையான மக்களாட்சியை அமைப்போம்” என்ற அவரது வார்த்தைகள், கட்சியின் எதிர்கால தேர்தல் முழக்கமாகப் பார்க்கப்படுகின்றன.
“தமிழின் பெருமை உலகம் முழுதும் ஒலிக்கட்டும்” அவரது பதிவின் இறுதியில், “தமிழின் பெருமையும் தமிழ்நாட்டின் புகழும் உலகெங்கும் ஓங்கி ஒலிக்கட்டும்! இனிய தமிழ்நாடு நாள் நல்வாழ்த்துகள்!” என கூறி, தமிழ்நாட்டின் மரபும் மகத்துவமும் உலகம் முழுவதும் ஒலிக்கட்டும் என தனது வாழ்த்தை நிறைவு செய்துள்ளார்.
