காலி பாட்டில் வாங்குவதனால் சுகாதார சீர்கேடு ஏற்பட்டு டாஸ்மாக் ஊழியர்கள் பாதிக்கப்பட்டு வருவதாகவும் காலி பாட்டில்கள் மற்றும் ஸ்டிக்கர் ஒட்டுவதனால் பணிச்சுமை அதிகரித்து வருவதாகவும் குற்றம் சாட்டி கோவையில் டாஸ்மாக் ஊழியர்கள் பீளமேடு பகுதியில் உள்ள தமிழ்நாடு மாநில வாணிபக் கழகத்தின் கோவை முதுநிலை மண்டல மேலாளர் அலுவலகத்தில் முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு நிலவியது.
மதுபான பாட்டில்களில் ஸ்டிக்கர் ஒட்ட மாட்டோம், காலி பாட்டில்களை வாங்க மாட்டோம் எனவும் நிர்வாகமே ஸ்டிக்கர் ஒட்டி கொடுக்க வேண்டும், பாட்டில்களை திரும்ப பெறுவதற்கு தனியாக ஆட்கள் நியமிக்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி 50 க்கும் மேற்பட்ட டாஸ்மாக் ஊழியர்கள் கோவை பீளமேடு பகுதியிலுள்ள டாஸ்மாக் மண்டல மேலாளர் அலுவலகத்தில் திடீர் முற்றுகையில் ஈடுபட்டனர்.
அப்போது அங்கு மேலாளர் இல்லாத நிலையில் மேலாளர் வந்து தங்களுடன் பேச்சுவார்த்தை நடத்த வேண்டும் என கூறி கேட்டு காத்திருப்பு போராட்டத்திலும் ஈடுபட்டனர்.அப்போது பேசிய ஊழியர்கள் கடந்த 2003-ம் ஆண்டு டாஸ்மாக் நிறுவனம் மது விற்பனைக்காக தொடங்கப்பட்டது ஆனால் தற்போது அனைத்து வேலைகையும் வாங்கி பணி சுமையை அதிகரித்து வருவதாக குற்றம் சாட்டினர்.ஸ்டிக்கர் ஒட்டுவதனாலும், காலி பாட்டில்களை திரும்பிப் பெறுவதாலும் பணிச்சுமை அதிகரித்து வருவதாகவும் எச்சில் பாட்டில்களை வாங்கும் போது டாஸ்மாக் ஊழியர்கள் சுகாதார சீர்கேட்டால் உடல் ரீதியாக பாதிக்கப்பட்டு வருவதாகவும் வேதனை தெரிவித்தனர்.
தி.மு.க வின் தேர்தல் வாக்குறுதி 159-யை உடனடியாக நிறைவேற்ற வேண்டும் எனவும் தி.மு.க ஆட்சியில் தேர்தல் வாக்குறுதி நிறைவேற்றவில்லை எனவும் அவர்கள் குற்றம் சாட்டினர்.தொடர்ந்து டாஸ்மாக் மண்டல மேலாளரின் நேர்முக உதவியாளர் தலைமையிலான குழுவினர் ஊழியர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தி வருகிற திங்கள் கிழமை அரசுடன் பேச்சுவார்த்தை நடத்தி உரிய தீர்வு கான்பதாக அளித்த உறுதியின் பேரில் போராட்டம் தற்காலிகமாக கைவிடப்பட்டதுடன் அங்கிருந்து ஊழியர்கள் கலைந்தனர்.இதன் காரணமாக அங்கு பரபரப்பு நிலவியது.