சென்னை: “நாளும் நம் நகரங்கள் இயங்க, நள்ளிரவு, புயல், மழை, வெள்ளம் என எந்நேரமும் ஓயாமல் உழைக்கும் தூய்மைப் பணியாளர்களின் மாண்பை நமது திராவிட மாடல் அரசு ஒருபோதும் விட்டுக்கொடுக்காது,” என்று தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
சென்னையில், பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி தூய்மைப் பணியாளர்கள் போராட்டம் நடத்தினர். அவர்களை நேற்று நள்ளிரவில் போலீசார் கைது செய்து அப்புறப்படுத்தினர். இந்த நடவடிக்கைக்கு எதிராக பல்வேறு எதிர்க்கட்சித் தலைவர்கள் கண்டனம் தெரிவித்தனர்.
இந்த நிலையில், முதல்வர் ஸ்டாலின் தலைமையில் நேற்று நடைபெற்ற அமைச்சரவை கூட்டத்துக்கு பிறகு, தூய்மைப் பணியாளர்களுக்காக 6 புதிய நலத்திட்டங்களை தமிழக அரசு அறிவித்தது.
அதன்பின் வெளியிட்ட அறிக்கையில், முதல்வர் ஸ்டாலின், கடந்த 4 ஆண்டுகளில் தூய்மைப் பணியாளர்களுக்காக பல நலத்திட்டங்களை செயல்படுத்தியுள்ளதாகவும், அவர்களின் பிற நியாயமான கோரிக்கைகளையும் பரிசீலித்து புதிய திட்டங்கள் அறிமுகப்படுத்தப்படுவதாகவும் தெரிவித்தார்.
அறிவிக்கப்பட்ட முக்கிய நலத்திட்டங்கள்:
தூய்மைப் பணியாளர்களுக்கு காலை உணவு வழங்கல்
குழந்தைகளுக்கு உயர்கல்வி ஊக்கத்தொகை
சுயதொழில் உதவி திட்டம்
நல்வாழ்வுக்காக ரூ.10 லட்சம் காப்பீடு
30,000 வீடுகள்/குடியிருப்புகள் வழங்கல்
பணியின்போது உயிரிழந்தால் ரூ.10 லட்சம் நிவாரண நிதி
மேலும், தூய்மைப் பணியாளர்களுக்கு ஏற்படக்கூடிய உடல் நலப் பாதிப்புகளை கண்டறிந்து, சிகிச்சை அளிக்கும் தனித்திட்டமும் அமல்படுத்தப்படும் எனவும் முதல்வர் உறுதியளித்தார்.
“இது என்றும் உங்களுடன், உங்களுக்காக நிற்கும் எளியோரின் அரசு,” என தனது அறிக்கையில் முதல்வர் ஸ்டாலின் வலியுறுத்தினார்.