கரூர் எல்லையில் இரவு முழுக்க காத்திருந்தோம்.. அனுமதி மறுத்தது போலீஸ் தான் – ஆதவ் அர்ஜுனா குற்றச்சாட்டு

கரூர் கூட்ட நெரிசல் துயரம் தொடர்பில், தவெக பொதுச் செயலாளர் ஆதவ் அர்ஜுனா புதிய குற்றச்சாட்டுகளை முன்வைத்துள்ளார். சம்பவம் நடந்த அன்று இரவு முழுவதும் பாதிக்கப்பட்டவர்களைச் சந்திக்க கரூர் மாவட்ட எல்லையில் தாங்கள் காத்திருந்தபோதும், போலீசாரே அனுமதி மறுத்ததாக அவர் கூறியுள்ளார்.

கரூர் கூட்ட நெரிசல் வழக்கை சிபிஐ விசாரணைக்கு மாற்ற உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டது. சிபிஐ விசாரணையை உச்ச நீதிமன்ற ஓய்வு பெற்ற நீதிபதி அஜய் ரஸ்தோகி தலைமையிலான குழு கண்காணிக்கும் எனவும் நீதிமன்றம் அறிவித்தது.

இந்தத் தீர்ப்புக்குப் பிறகு செய்தியாளர்களைச் சந்தித்த ஆதவ் அர்ஜுனா, “சம்பவம் நடந்த அன்று கரூர் போலீசாரே எங்களை அனுமதிக்கவில்லை. நாங்கள் எந்த இடத்துக்கும் ஓடவில்லை; கரூர் மாவட்ட எல்லையிலேயே நிர்மல் குமார், அருண் ராஜ் உள்ளிட்டோர்களுடன் காத்திருந்தோம். இதை எங்கள் செல்போன் சிக்னல்களை வைத்து நிரூபிக்கலாம்,” என்றார்.

அவர் மேலும் கூறியதாவது : “நாங்கள் உள்ளே சென்றால் கலவரம் ஏற்படும் என்று கூறி போலீசார் தடுத்தனர். இதையும் நாங்கள் நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப் போகிறோம். சம்பவத்துக்குப் பிறகு எங்கள் கட்சியினர் மீது தடியடி நடத்தப்பட்டது. எங்களை தீவிரவாதிகள் போல சித்தரித்தனர். இந்தச் சம்பவத்துக்குப் பிறகு 3–4 நாட்கள் எங்களுக்குள் மனிதாபிமான வேதனை இருந்தது; அதனால்தான் ஊடகங்களில் பேசவில்லை.”

அதே நேரத்தில், “இந்தச் சம்பவத்தை பயன்படுத்தி தவெக கட்சியை மொத்தமாக முடக்க திமுக திட்டமிட்டது. நீதிமன்றம் விடுமுறையில் இருந்த அந்த வாரத்தைப் பயன்படுத்தி, பொய்யான தகவல்களை பரப்பினர்,” என்றும் ஆதவ் அர்ஜுனா குற்றஞ்சாட்டினார்.

அதுமட்டுமின்றி, அருணா ஜெகதீசன் ஆணையம் விசாரணை நடந்து கொண்டிருக்கும் வேளையில் தலைமைச் செயலாளர், சுகாதாரச் செயலாளர் ஆகியோர் செய்தியாளர்களைச் சந்தித்தது ஏன் எனவும் அவர் கேள்வி எழுப்பினார்.

Exit mobile version