வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்துள்ள நிலையில், மழையால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் திமுக நிர்வாகிகள் எவ்வாறு செயல்பட வேண்டும் என்பதற்கான ஆலோசனை கூட்டம் இன்று சென்னை அண்ணா தலைமை அலுவலகத்தில் நடைபெற்றது.
இந்தக் கூட்டத்தில் கலந்து கொண்ட துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின், “மக்களோடு நின்றோம் என்பதை நாம் செயலில் நிரூபிக்க வேண்டும்” என வலியுறுத்தினார்.
அவர் மேலும் கூறியதாவது :
“சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு உள்ளிட்ட மாவட்டங்களில் கடந்த சில நாட்களாக இடையறாது மழை பெய்து வருகிறது. வானிலை மையம் இன்னும் இரண்டு நாள்களில் மேலும் ஒரு மழை அலை உருவாகும் என எச்சரித்துள்ளது. இதனால் மழை நிலைமை கடந்த முறைதை விட தீவிரமாக இருக்கக்கூடும் என கூறப்படுகிறது.
இப்படியான சூழலில் மக்கள் பாதுகாப்பிற்காக, நமது நிர்வாக அமைப்பு இணைந்து செயல்பட வேண்டும். சில இடங்களில் தண்ணீர் தேங்கியிருந்தாலும், சிறிது நேரம் வெயில் அடித்தவுடன் வடிந்துவிடுகிறது.
நான் நேரில் சென்ற சில பகுதிகளில், மக்கள் சிரித்த முகத்தோடு ‘வந்து பாருங்கள், நீங்கள் வந்தால் சரியாகிவிடும்’ எனக் கூறுகின்றனர். இது நம்மீது மக்களுக்கு உள்ள நம்பிக்கையை காட்டுகிறது.
அந்த நம்பிக்கைக்கு இணையாக, நமது அரசு மக்களோடு நிற்கும் என உறுதியளிக்கிறேன். இந்த மழையில் நாங்கள் மக்களோடு இணைந்தே செயல்பட்டோம் என்பதை நமது செயல்களால் நிரூபிப்போம்,” என்று உதயநிதி ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
