சென்னை:
தமிழக வெற்றிக் கழகத்தின் நிர்வாகக் குழுக் கூட்டம் இன்று பனையூரில் நடைபெற்றது. கூட்டம் முடிந்த பின் செய்தியாளர்களை சந்தித்த த.வெ.க. இணை பொதுச் செயலாளர் சி.டி.ஆர். நிர்மல் குமார் பல்வேறு முக்கிய கருத்துகளை தெரிவித்தார்.
அவர் கூறியதாவது:
“வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தம் தொடர்பாக நடைபெறும் அனைத்துக் கட்சி கூட்டத்துக்கு இதுவரை எங்களுக்கு அழைப்பு வரவில்லை. இதுகுறித்து அதிகாரப்பூர்வ தகவல் எதுவும் எங்களுக்கு வழங்கப்படவில்லை,” என்றார்.
“விஜய் ஹெலிகாப்டரில் சென்று பிரச்சாரம் செய்வார் என்ற செய்திகள் யூகத்தின் அடிப்படையில் வந்தவை. வழக்கம்போலவே எங்கள் தலைவரின் மக்கள் சந்திப்பு நிகழ்ச்சிகள் நடைபெறும்,” எனவும் கூறினார்.
கடந்த செப்டம்பர் 27-ஆம் தேதி கரூரில் நடைபெற்ற விஜயின் பொதுக்கூட்டத்தில் ஏற்பட்ட கூட்ட நெரிசலில் 41 பேர் உயிரிழந்தது. அந்த சம்பவத்துக்குப் பிறகு சரியாக ஒரு மாதம் கழித்து, பாதிக்கப்பட்டவர்களின் குடும்பத்தினரை விஜய் நேரில் சந்தித்து ஆறுதல் கூறியிருந்தார்.
“அந்த சந்திப்பு முழுக்க மனிதநேய அடிப்படையில் நடந்தது. அதை அரசியலாக்கும் நோக்கம் எங்களுக்கில்லை. முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி ‘கட்டுப்பாடின்றி கூட்டம் நடந்தது’ என கூறியிருப்பது, காவல்துறை கட்டுப்படுத்த முடியாத கூட்டம் என்பதை ஒப்புக்கொள்வதல்லவா?” என கேள்வி எழுப்பினார்.
விஜயின் மக்கள் சந்திப்பு தாமதமானது குறித்து அவர் விளக்குகையில், “ஒரு மணி நேரத்தில் செல்லக்கூடிய இடத்தை 7 மணி நேரம் பயணம் செய்தோம். காவல்துறையின் ஒத்துழைப்பும் உரிய பாதுகாப்பும் இருந்திருந்தால், எங்களின் நிகழ்ச்சி எளிதாக நடந்திருக்கும்,” என்றார்.
“கரூரில் காவல்துறைக்கு விஜய் தெரிவித்த பாராட்டு, அவர்களின் வேகமான நடவடிக்கைக்கு மட்டுமே. மற்ற இடங்களில் கிடைக்காத ஒத்துழைப்பை கரூரில் பெற்றோம் என்பதே அதற்கான காரணம்.”
இன்றைய நிர்வாகக் குழுக் கூட்டத்தில் பல முக்கிய தீர்மானங்கள் விவாதிக்கப்பட்டதாகவும், அவை தொடர்பாக தலைவரான விஜய் விரைவில் அறிவிப்பார் எனவும் நிர்மல் குமார் தெரிவித்தார்.

















