“பொறுப்பு இல்லைனு தட்டிக் கழிக்க முடியாது” – தவெக நிர்வாகி ஜாமீன் மனுவில் நீதிபதி கடுமையான கருத்து

மதுரை : கரூர் கூட்ட நெரிசல் மரணச் சம்பவத்தில் கைது செய்யப்பட்ட தமிழக வெற்றிக் கழக நிர்வாகி பவுன்ராஜ் தாக்கல் செய்த ஜாமீன் மனுவை விசாரித்த உயர்நீதிமன்ற மதுரை அமர்வு, “இந்தச் சம்பவத்தில் யாருக்கும் பொறுப்பு இல்லை என தட்டிக் கழிக்க முடியாது; ஒவ்வொருவருக்கும் ஒரு பொறுப்பு உள்ளது” என்று கருத்து தெரிவித்தது.

கடந்த செப்டம்பர் 27 அன்று கரூர் வேலுசாமிபுரத்தில் தவெக தலைவர் விஜய் தலைமையில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் ஏற்பட்ட நெரிசலில் 41 பேர், அதில் குழந்தைகளும் உட்பட உயிரிழந்தனர். இதனைத் தொடர்ந்து, தவெக கரூர் மாவட்ட செயலாளர் மதியழகன் மற்றும் நகர நிர்வாகி பவுன்ராஜ் ஆகியோர் கைது செய்யப்பட்டு நீதிமன்றக் காவலில் வைக்கப்பட்டனர்.

இச்சம்பவத்தில் தவெக தலைவர் விஜயின் தாமதம் கூட்ட நெரிசலுக்கு காரணம் என காவல்துறை கூறியதுடன், “நாங்கள் காவல்துறையின் அறிவுறுத்தல்படி மட்டுமே செயல்பட்டோம்” என தவெக தரப்பும் எதிர்வாதம் முன்வைத்தது.

இதன் தொடர்ச்சியாக, இருவரும் ஜாமீன் கோரி மனு தாக்கல் செய்தனர். கரூர் மாவட்ட நீதிமன்றம் அந்த மனுவை சிபிஐ விசாரணை தொடங்கியதைக் கருத்தில் கொண்டு, சிபிஐயையும் எதிர்மனுதாரராக சேர்க்க வேண்டும் என கூறி விசாரணையை ஒத்திவைத்தது.

இந்நிலையில், தற்போது மதுரை உயர்நீதிமன்ற கிளையில் பவுன்ராஜ் மீண்டும் ஜாமீன் மனு தாக்கல் செய்தார். அவர் தரப்பில், “நான் நிகழ்ச்சி ஏற்பாட்டில் நேரடி பங்கில்லாதவன்; சிபிஐயை எதிர்மனுதாரராக சேர்த்துள்ளோம்” என வாதிடப்பட்டது.

அதை விசாரித்த நீதிபதி, “இத்தகைய நிகழ்வுகளில் முழுமையான பொறுப்பு யாருக்கும் இல்லை எனக் கூறி தட்டிக் கழிக்க முடியாது. அனைவருக்கும் பொறுப்பு உண்டு” எனக் குறிப்பிட்டார்.

பின்னர் வழக்கை நாளைக்கு விசாரணைக்கு ஒத்திவைத்து, நீதிமன்றம் உத்தரவிட்டது.

Exit mobile version