தமிழக விவசாயிகள் மீதான அலட்சியத்தால் மக்கள் மனங்களில் உருவாகியுள்ள அதிருப்தி நாளுக்கு நாள் அதிகரித்து வருவதாகவும், திமுக ஆட்சியாளர்களை மக்கள் வீட்டுக்கு அனுப்பப் போவது உறுதி என தமிழக வெற்றி கழக தலைவர் விஜய் தெரிவித்தார்.
தொடர் மழையால் நெல் உள்ளிட்ட பயிர்கள் சேதமடைந்துள்ள நிலையில், விவசாயிகள் கடுமையான இழப்பைச் சந்தித்து வருவதை அவர் குறிப்பிட்டார். இந்நிலையில், “மழையால் நெல்மணிகள் வீணாகும் முன் அவற்றை விரைவாக கொள்முதல் செய்ய மாநில அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். உண்மையாகவே விவசாயிகளைப் பற்றிய அக்கறை கொண்ட அரசு என்றால், அவர்களின் உழைப்பை மதித்து, பொருளாதார ரீதியாக அவர்களை உயர்த்தும் முயற்சிகளை மேற்கொள்ள வேண்டும்,” என விஜய் வலியுறுத்தினார்.
அவர் மேலும் கூறியதாவது: “ஏழை விவசாயிகள் கடின உழைப்பால் விளைவித்த நெல்மணிகளை உரிய நேரத்தில் வாங்காமல், மழையில் நனைந்து வீணாகும் நிலையில் விட்டுவிட்டது அரசின் பெரிய தவறு. வெற்று விளம்பர அரசியலில் அல்லாது, விவசாயிகள் நலனுக்காக செயல்படும் ஆட்சியே உண்மையானது. ஆண்டுதோறும் இதே பிரச்சனை நிகழ்ந்தும், இதுவரை தக்க முன்னெச்சரிக்கை எடுக்கப்படாதது கவலைக்குரியது.”
விவசாயிகளின் நலனுக்காக அரசு உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும், வரவிருக்கும் வடகிழக்கு பருவமழையில் மக்களைப் பாதுகாக்க தேவையான அனைத்துத் திட்டங்களும் போர்க்கால அடிப்படையில் செயல்படுத்தப்பட வேண்டும் எனவும் விஜய் கேட்டுக்கொண்டார்.
மக்கள் மனங்களில் ஆட்சிக்கெதிரான உணர்வு வேரூன்றி வளர்ந்து வருவதாகவும், இந்த எதிர்ப்பு அலைதான் திமுக ஆட்சிக்கு முடிவாக இருக்கும் என்றும் அவர் கூறினார்.

















