பஹல்காம் பகுதியில் நிகழ்ந்த பயங்கரவாத தாக்குதலுக்கு பதிலடி அளிக்கும் வகையில், இந்திய ராணுவம் ‘ஆபரேஷன் சிந்தூர்’ என்ற பெயரில் பாகிஸ்தானின் ஆக்கிரமிக்கப்பட்ட காஷ்மீர் பகுதியில் உள்ள 9 பயங்கரவாத முகாம்களை அழித்தது.
இதனைத் தொடர்ந்து, பாகிஸ்தான் ராணுவம் ட்ரோன் மூலமாக இந்திய எல்லைப் பகுதிகளில் தாக்குதல் நடத்த முயற்சித்தது. ஆனால், இந்த முயற்சிகளை இந்திய பாதுகாப்புப் படைகள் முற்றிலும் தடுத்து நிறுத்தின. பின்னர், பதிலடி நடவடிக்கையாக இந்தியா, பாகிஸ்தானின் முக்கிய விமானப்படை தளங்கள் மீது தாக்குதல் நடத்தியது.
இருநாடுகளுக்கிடையே தாக்குதல்கள் தொடர்ந்த நிலையில், அமெரிக்கா உள்ளிட்ட உலக நாடுகளின் தலையீட்டால் இந்த பதிலடி நடவடிக்கைகள் நிறைவுக்கு வந்தன. எனினும், இந்திய தாக்குதலால் பெரிதும் பாதிக்கப்பட்ட பாகிஸ்தான், அதை மறைக்க பல தவறான தகவல்களை பரப்பியது. ஆனால் இந்தியா, ஆதாரங்களுடன் பதிலளித்து உண்மையை உலகிற்கு எடுத்துக்காட்டியது.
மேலும், 2019ல் சீன ராணுவம் நடத்திய பயிற்சியின் புகைப்படங்களை பாகிஸ்தான் தங்களுடைய வெற்றிப்படங்களாக வெளியிட்டது. ஆனால் பின்னர் அந்த புகைப்படங்கள் உண்மையல்ல என தெரியவந்ததும், பாகிஸ்தான் அடையாளம் இழந்த நிலைக்கு தள்ளப்பட்டது.
இந்தச் சூழ்நிலையில், பாகிஸ்தான் ராணுவ தளபதி ஆசிம் முனீருக்கு பதவி உயர்வு அளிக்கப்பட்டது, இது இணையத்தில் பெரிய விவாதத்தை ஏற்படுத்தியது.
இந்நிலையில், பாகிஸ்தான் பிரதமர் ஷெபாஸ் ஷெரீப், இந்தியாவின் தாக்குதல் குறித்து முதல் முறையாக மௌனத்தை கலைத்தார். அவர் கூறியதாவது :
“மே 9, 10ஆம் தேதிகளின் இரவுகளில் இந்திய தாக்குதலுக்கு பதிலடி கொடுப்பதற்கு நாங்கள் முடிவு செய்திருந்தோம். காலை 4:30க்கு தொழுகைக்குப் பிறகு தாக்குதல் நடத்த படைகள் தயாராக இருந்தன. ஆனால், அதற்கு முன்பே இந்தியா, பிரமோஸ் உள்ளிட்ட ஏவுகணைகளை பயன்படுத்தி ராவல்பிண்டி விமான நிலையம் உள்ளிட்ட முக்கிய இடங்களை தாக்கியது. இதனை ராணுவ தளபதி ஆசிம் முனீர் அதிகாலை நேரத்தில் எனக்கு தெரிவித்தார்.”
இந்த தகவலால், பாகிஸ்தான் இந்திய தாக்குதலை மறுக்க முடியாத உண்மையாகவே ஒப்புக்கொண்டது என்பது உறுதியாகிறது.