“மக்கள் செய்த பிழை அதனை அனுபவிக்கிறோம்” – சீமான்

சென்னை: “ஆட்சியாளரை குறை சொல்லி என்ன பயன்? அவரை அதிகாரத்தில் அமர வைத்தது மக்கள்தான். என் மக்கள் செய்த பிழைதான் இன்று நாமும் அனுபவிக்கிறோம்” என்று நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் தெரிவித்துள்ளார்.

சென்னையில் நிருபர்களிடம் பேசிய அவர், துப்புரவு பணியாளர்களின் பிரச்சினையை எடுத்து கூறினார்.

“உண்மையில் முதல்வரை சந்தித்தவர்கள் தொழிலாளர்களா? ஒரு தன்மானமிக்க தொழிலாளி முதலாளிகளுடன் சேர்ந்து நிற்பார்களா? மக்கள் உழைக்கும் பணியை கூலியாக முதலாளிகளுக்கு ஒப்படைத்து விட்டார்கள். அதிமுகக்கும் திமுகக்கும் மாற்றுக் கொள்கை இல்லை. அதிமுக ஆட்சியில் 11 மண்டலங்களை பிரித்து கொடுத்தனர். மீதியை திமுக அரசு கொடுக்கிறது” என்றார்.

துப்புரவு பணி தனியாரிடம் ஒப்படைக்கப்பட்டதை சாடிய அவர்,
“ராம்கி போன்ற தனியார் நிறுவனங்களிடம் பணி ஒப்படைக்கப்படுகிறது. தொழிலாளர்களுக்கு காலை உணவு, காப்பீடு, நிவாரணம் என்று அறிவிக்கிறார்கள். ஆனால் இதெல்லாம் யார் பணத்தில்? அரசே தரும் பணத்தில் முதலாளிகள் நடுவில் நின்று லாபம் எடுப்பதே தவிர, தொழிலாளர்களுக்கு நேரடி நன்மை கிடைக்கவில்லை” எனக் குற்றம் சாட்டினார்.

மேலும்,
“5 ஆயிரம் கோடி ரூபாய் வரி வசூலிக்கப்படுகிறது. ஆனால் சாலைகள் சீரமைக்கப்படவில்லை. மழைநீர் வடிகால், கழிவுநீர் மேலாண்மை எதுவும் சரியாக நடைபெறவில்லை. அப்படியிருக்க மாநகராட்சி, மேயர், கவுன்சிலர் எதற்கு?” என்று கேள்வி எழுப்பினார்.

அதே நேரத்தில் கல்வித் துறையை சுட்டிக்காட்டிய அவர்,
“நாட்டின் குழந்தைகளுக்கு தரமான கல்வி கொடுக்க முடியாமல் 207 அரசு பள்ளிகளை மூடுகிறார்கள். பிறப்பு விகிதம் குறைந்துவிட்டது என அமைச்சர் காரணம் சொல்கிறார். ஆனால் தனியார் பள்ளிகளுக்கு மாணவர்கள் கூட்டம் கூட்டமாகச் செல்கிறார்கள். அப்படியிருக்க அரசு பள்ளிகள் மட்டும் மூடப்படுவது எதற்காக?” எனக் கண்டனம் தெரிவித்தார்.

மேலும் அரசாங்கத்தை சாடிய சீமான்,
“மருத்துவம், கல்வி, போக்குவரத்து, மின் உற்பத்தி – அனைத்தையும் தனியார் தான் சிறப்பாகச் செய்ய முடியும் என்றால், அரசின் பங்கு என்ன? ஆட்சி நடத்தும் திறன் இல்லையென்றால், நீங்கள் கையாலாகாதவர்கள், தோற்றுப்போனவர்கள்” என்று விமர்சித்தார்.

இறுதியாக,
“ஆட்சியாளரை குறை சொல்லி பயன் இல்லை. அந்த ஆட்சியாளனை அதிகாரத்தில் அமர வைத்த மக்கள்தான் பொறுப்பு. என் மக்கள் செய்த பிழையை நாமே அனுபவிக்கிறோம்” என அவர் தெரிவித்தார்.

Exit mobile version