தென்காசியில் வாக்காளர் சிறப்புத் திருத்தம்: ஜனநாயகம் காக்கும் கையெழுத்து இயக்கம் தொடக்கம்!

இந்தியத் தேர்தல் ஆணையத்தின் வழிகாட்டுதலின்படியும், தமிழகத் தலைமைத் தேர்தல் அதிகாரியின் அறிவுரையின்படியும், தென்காசி மாவட்டத்தில் வாக்காளர் பட்டியலில் சிறப்புத் தீவிர திருத்தம் – 2026 மேற்கொள்ளும் பணி முழுவீச்சில் நடைபெற்று வருகிறது. இதன் ஒரு பகுதியாக, பொதுமக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்தும் நோக்கில் மாவட்ட ஆட்சியர் ஏ.கே. கமல கிஷோர் அவர்கள் “சிறப்புத் தீவிர திருத்தத்தில் கலந்து கொள்வோம், ஜனநாயகத்தை வலுப்படுத்துவோம்” என்ற கையெழுத்து இயக்கத்தைத் தொடங்கி வைத்தார். வரும் 01.01.2026 தேதியினைத் தகுதி ஏற்படுத்தும் நாளாகக் கொண்டு, 04.11.2025 அன்று முதல் வாக்காளர் பட்டியலில் சிறப்புத் தீவிர திருத்தம் மேற்கொள்ளும் பணி மாவட்டத்தில் தொடங்கப்பட்டுள்ளது. இதன் மூலம், 01.01.2026 அன்று 18 வயது பூர்த்தியடையும் அனைவரும் தங்கள் பெயரை வாக்காளர் பட்டியலில் சேர்க்க விண்ணப்பிக்கலாம். மேலும், ஏற்கனவே வாக்காளர் பட்டியலில் பெயர் விடுபட்டவர்கள்,

முகவரி மாற்றம் செய்ய விரும்புபவர்கள் மற்றும் திருத்தங்கள் மேற்கொள்ள விரும்புபவர்கள் இந்த வாய்ப்பைப் பயன்படுத்திக் கொள்ளலாம் எனத் தேர்தல் பிரிவு அதிகாரிகள் தெரிவித்தனர். சிறப்புத் தீவிர திருத்தம் குறித்த முறையான வாக்காளர் கல்வி மற்றும் தேர்தல் பங்களிப்பின் (SVEEP Activities) ஒரு பகுதியாக, தென்காசி மாவட்ட ஆட்சியர் அலுவலகக் கூட்டரங்கில் நவம்பர் 5-ஆம் தேதி விழிப்புணர்வு கையெழுத்து இயக்கம் நடைபெற்றது. மாவட்ட ஆட்சியர் ஏ.கே. கமல கிஷோர், முதல் கையெழுத்திட்டு இயக்கத்தைத் தொடங்கி வைத்தார். அப்போது பேசிய அவர், “ஒவ்வொரு குடிமகனும் ஜனநாயகக் கடமையை ஆற்றுவதற்கு வாக்காளர் பட்டியலில் இடம்பெறுவது அவசியம். இளம் வாக்காளர்கள் இந்தச் சிறப்புத் திருத்தத்தின் மூலம் தங்கள் பெயரைப் பட்டியலில் சேர்த்து, இந்திய ஜனநாயகத்தை வலுப்படுத்த வேண்டும்” என்று வலியுறுத்தினார்.

இந்த விழிப்புணர்வு கையெழுத்து இயக்கத்தில் மாவட்ட வருவாய் அலுவலர் சீ. ஜெயச்சந்திரன், மாவட்ட சமூக நல அலுவலர் செல்வி பே. மதிவதனா, துணை இயக்குநர் (சுகாதாரம்) மரு. வி. கோவிந்தன், உதவி இயக்குநர் (ஊராட்சி) விஷாலி, தனி வட்டாட்சியர் (தேர்தல்) ஹரிஹரன், தென்காசி வருவாய் வட்டாட்சியர் மணிகண்டன் உள்ளிட்ட மாவட்ட ஆட்சியரக அலுவலர்கள் மற்றும் பொதுமக்கள் ஆர்வத்துடன் கலந்து கொண்டு கையெழுத்திட்டனர். தேர்தல் ஆணையத்தின் இந்த விழிப்புணர்வு நடவடிக்கைகள் வாக்காளர் எண்ணிக்கையை அதிகரிக்கவும், பட்டியலில் உள்ள பிழைகளைத் திருத்தித் துல்லியமான பட்டியலை உருவாக்கவும் உதவும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Exit mobile version