கோயம்புத்தூர் மாவட்டத்தின் அடையாளமாகவும், பிரசித்தி பெற்ற ஆன்மீகத் தலமாகவும் விளங்கும் மருதமலை அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி திருக்கோயில் வளாகத்தில், ‘வெள்ளியங்கிரி மலை பாதுகாப்பு அமைப்பு’ சார்பில் மாபெரும் உழவாரப் பணி (தூய்மைப் பணி) நடைபெற்றது. ஆன்மீகப் பயணத்தின் போது சுற்றுச்சூழல் மாசடைவதைத் தடுக்கும் நோக்கில், மலையடிவாரத்தில் தொடங்கி மலைக்கோயில் வரை செல்லும் பாதையின் இருபுறங்களிலும் குவிந்து கிடந்த பிளாஸ்டிக் கழிவுகளை அகற்றும் பணியில் தன்னார்வலர்கள் தீவிரமாக ஈடுபட்டனர். வனத்துறையின் முறையான வழிகாட்டலின் கீழ் நடைபெற்ற இந்த உழவாரப் பணி, மருதமலைப் பகுதியில் இந்த அமைப்பினரால் மேற்கொள்ளப்படும் 6-வது கட்டப் பணியாகும். குறிப்பாக, பக்தர்கள் அதிகளவில் ஓய்வெடுக்கும் ஐந்தாவது மண்டபப் பகுதியில் குவிந்து கிடந்த பிளாஸ்டிக் பைகள், காலி குடிநீர் பாட்டில்கள் மற்றும் தின்பண்ட உறைகள் உள்ளிட்ட சுமார் 2 டன் எடையுள்ள பிளாஸ்டிக் குப்பைகள் சேகரிக்கப்பட்டு அப்புறப்படுத்தப்பட்டன.
இந்தச் சேவை குறித்து வெள்ளியங்கிரி மலை பாதுகாப்பு அமைப்பினர் கூறுகையில், “வனப்பகுதிகளில் வீசப்படும் பிளாஸ்டிக் கழிவுகள் மட்குவதற்குப் பல நூற்றாண்டுகள் ஆகும் என்பதால், அவை மண்ணின் வளத்தைப் பாதிப்பதோடு, உணவு எனத் தவறுதலாக உட்கொள்ளும் வன உயிரினங்களின் உயிருக்கும் பெரும் ஆபத்தாக முடிகிறது. இந்த விபரீதத்தைத் தடுக்கவே 400 பேர் கொண்ட எங்களது தன்னார்வலர் குழு இந்தப் பணியைத் தொடர்ந்து மேற்கொண்டு வருகிறது. ஏற்கனவே வெள்ளியங்கிரி மலைப் பகுதிகளில் 18 வாரங்கள் தொடர்ச்சியாகப் பணியாற்றி சுமார் 10 டன் பிளாஸ்டிக் குப்பைகளை அகற்றியுள்ளோம். அதன் தொடர்ச்சியாகவே மருதமலையிலும் இந்தப் பணியைச் செய்கிறோம்” எனத் தெரிவித்தனர்.
வெறும் குப்பைகளை அகற்றுவதோடு மட்டும் நின்றுவிடாமல், மலைக்கு வரும் பக்தர்கள் பிளாஸ்டிக் பயன்பாட்டைத் தவிர்க்க வேண்டும் என்றும், கொண்டு வரும் கழிவுகளை அங்குள்ள குப்பைத் தொட்டிகளில் மட்டுமே போட வேண்டும் என்றும் தன்னார்வலர்கள் விழிப்புணர்வு பிரசாரத்தில் ஈடுபட்டனர். ஆன்மீகப் புனிதத்தைப் போற்றும் அதே வேளையில், இயற்கையையும் வனத்தையும் பாதுகாக்கப் பொதுமக்கள் முழு ஒத்துழைப்பு வழங்க வேண்டும் என்பதே இவர்களின் பிரதான கோரிக்கையாக உள்ளது. தன்னார்வலர்களின் இந்தச் செயலைப் பார்த்த பிற பக்தர்களும் அங்கிருந்த குப்பைகளை அகற்ற முன்வந்தது நெகிழ்ச்சியை ஏற்படுத்தியது.
