ஆஸ்திரேலியாவுக்கு எதிரான இரண்டாவது ஒருநாள் போட்டியில், இந்திய அணியின் ஸ்டார் பேட்ஸ்மேன் விராட் கோலி மீண்டும் டக் அவுட்டாகி ரசிகர்களை ஏமாற்றியுள்ள நிலையில், ரோஹித் சர்மா அரைசதம் அடித்து ரசிகர்களை உற்சாகப்படுத்தியுள்ளார்.
3 ஒருநாள் போட்டிகள் கொண்ட தொடரின் முதல் ஆட்டம் பெர்த்தில் நடைபெற்றது. மழை குறுக்கிட்ட அந்த ஆட்டத்தில் இந்திய அணி 7 விக்கெட் வித்தியாசத்தில் தோல்வி அடைந்தது. அந்த போட்டியில் நீண்ட இடைவெளிக்குப் பிறகு மைதானத்தில் திரும்பிய ரோஹித் சர்மாவும் விராட் கோலியும் தாக்கம் செலுத்தவில்லை.
இந்நிலையில், தொடரை சமன் செய்யும் நோக்கில் இந்தியா இன்று அடிலெய்டு ஓவல் மைதானத்தில் ஆஸ்திரேலியாவுக்கு எதிராக மோதியது. டாஸ் வென்ற ஆஸ்திரேலியா பந்துவீச்சைத் தேர்வு செய்தது.
பேட்டிங்கைத் தொடங்கிய இந்திய அணிக்கு தொடக்கமே அதிர்ச்சியாக அமைந்தது. கேப்டன் ஷுப்மன் கில் 9 ரன்களில் அவுட்டானார். அதன் பிறகு களமிறங்கிய விராட் கோலி, ரசிகர்களின் பெரும் எதிர்பார்ப்பைச் சுமந்து வந்தார். ஆனால், சேவியர் பந்தில் எல்.பி.டபுள்யூ முறையில் வெறும் 4 பந்துகள் விளையாடியவுடன் டக் அவுட்டானார்.
விராட் கோலி பெவிலியனுக்குத் திரும்பும் போது, ரசிகர்கள் அவருக்கு ஊக்கம் அளிக்கும் விதமாக கைதட்டினர். அதற்கு விராட் கையசைத்து நன்றி தெரிவித்தார்.
மற்றொரு புறம், முன்னாள் கேப்டன் ரோஹித் சர்மா நிதானமாகவும் நம்பிக்கையுடனும் ஆடினார். சிறந்த ஷாட்டுகளால் ரசிகர்களை கவர்ந்த அவர், 77 பந்துகளில் 53 ரன்கள் எடுத்தார். 2 சிக்சர்களை பறக்கவிட்ட ரோஹித், தற்போது அரைசதத்துடன் களத்தில் விளையாடி வருகிறார்.
இதே பாங்கில் ரோஹித் தொடர்ந்தால், அவரது சதம் ரசிகர்களுக்கு ஒரு பெரிய இன்ப அதிர்ச்சியாக அமையும் என எதிர்பார்க்கப்படுகிறது.
 
			















