சென்னை : விதிமீறல் கட்டடங்கள் தொடர்பான வழக்கில், சென்னை மாநகராட்சி ஆணையர் குமரகுருபரன், உயர்நீதிமன்றத்தில் நிபந்தனையற்ற மன்னிப்பு கேட்டார்.
சென்னை மாநகராட்சியின் பல்வேறு பகுதிகளில் சட்டவிரோதமாக கட்டிடங்கள் எழுப்பப்பட்டுள்ளதை தொடர்ந்து, 2021 டிசம்பரில் ஹைகோர்ட் நடவடிக்கை எடுக்க உத்தரவிட்டது. அதன்படி, ராயபுரம் உட்பட பல மண்டலங்களில் விதிமீறல் கட்டடங்களுக்கு எதிராக நடவடிக்கை எடுக்கப்பட்டிருக்க வேண்டும். எனினும், நீதிமன்ற உத்தரவுகள் சரியாக அமல்படுத்தப்படவில்லை என குற்றச்சாட்டு எழுந்தது.
இந்த நிலையில், வழக்கறிஞர் ருக்மாங்கதன் தாக்கல் செய்த அவமதிப்பு வழக்கில், மாநகராட்சி தரப்பின் அலட்சியத்தை நீதிபதிகள் கண்டித்தனர். மேலும், நீதிமன்ற உத்தரவை பின்பற்றாததால், மாநகராட்சி ஆணையருக்கு ரூ.1 லட்சம் அபராதம் விதிக்கப்பட்டது. அந்த தொகையை, ஆணையரின் சம்பளத்தில் இருந்து பிடித்தம் செய்து அடையாறு புற்றுநோய் மருத்துவமனைக்கு வழங்கவும் உத்தரவிடப்பட்டது.
பின்னர், நீதிமன்றத்தில் ஆஜரான ஆணையர் குமரகுருபரன், “நான் வேண்டுமென்றே உத்தரவை மீறவில்லை. நடந்த தவறுக்கு முழுப் பொறுப்பேற்று மன்னிப்பு கேட்டுக் கொள்கிறேன்” என தெரிவித்தார். இதையடுத்து, நீதிபதிகள் அவருக்கு விதிக்கப்பட்ட அபராதத்தை ரத்து செய்து உத்தரவிட்டனர்.
நீதிபதிகள் மேலும், இனி விதிமீறல் கட்டடங்களுக்கு எதிரான நீதிமன்ற உத்தரவுகள் மிகக் கடுமையாகவும் கவனமாகவும் செயல்படுத்தப்பட வேண்டும் என எச்சரிக்கை விடுத்தனர்.