மயிலாடுதுறை அருகே சேந்தங்குடி வள்ளாலகரம் பகுதி கிராம மக்கள் தங்களுக்கு இலவச வீட்டு மனை பட்டா வழங்க கோரி மாவட்ட ஆட்சியரிடம் கோரிக்கை மனு அளித்தனர்.
மயிலாடுதுறை மாவட்டம் மயிலாடுதுறை அருகே உள்ள சேந்தங்குடி- வள்ளலகரம் கிராமத்தில் 500க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். இங்குள்ள ஒவ்வொரு குடும்பத்திலும் அதிக நபர்கள் வசிப்பதால் இட நெருக்கடியில் மிகவும் அவதி அடைந்து வருகின்றனர். இது குறித்து பலமுறை கிராம சபை கூட்டத்திலும் தீர்மானங்கள் நிறைவேற்றியுள்ள நிலையில் தங்களுக்கு இலவச வீட்டு மனை பட்டா வழங்க வேண்டும் என பல ஆண்டுகளாக கோரிக்கை விடுத்து வருகின்றனர். இதுவரைபலமுறை மனு அளித்தும் எவ்வித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என கூறப்படுகிறது. இதனை அடுத்து பாதிக்கப்பட்ட அப்பகுதி மக்கள் நூற்றுக்கும் மேற்பட்டோர் மயிலாடுதுறை மாவட்ட ஆட்சியரகத்தில் இன்று நடைபெற்ற பொதுமக்கள் குறைதீர் முகாமில் தங்களுக்கு இலவச வீட்டு மனை பட்டா வழங்க கோரி மாவட்ட ஆட்சியர் ஸ்ரீகாந்திடம் கோரிக்கை மனு அளித்தனர். அதனை பெற்றுக் கொண்ட மாவட்ட ஆட்சியர் உடனடியாக நடவடிக்கை எடுக்குமாறு துறை சார்ந்த அதிகாரிகளுக்கு அறிவுறுத்தினார்.
