புதுடில்லி:
2026ம் ஆண்டு நடைபெறவுள்ள தமிழக சட்டசபை தேர்தலை முன்னிட்டு, நடிகர் விஜயின் தவெக கட்சி “விசில்” சின்னத்தை கோரி இந்திய தேர்தல் கமிஷனில் மனு அளித்துள்ளது.
தவெக இணைப் பொதுச் செயலாளர் சி.டி.ஆர். நிர்மல் குமார், 1968ம் ஆண்டு தேர்தல் சின்ன ஆணையை மேற்கோள் காட்டி, புதுடில்லியில் உள்ள தேர்தல் கமிஷனில் நேரில் மனு அளித்தார். இதில் விசில், ஆட்டோ ரிக்ஷா, மைக்ரோபோன் உள்ளிட்ட 10 விருப்ப சின்னங்களின் பட்டியல் சமர்ப்பிக்கப்பட்டுள்ளது. அவற்றில் முதலிடத்தில் “விசில்” சின்னம் இடம்பிடித்துள்ளது.
அந்தப் பட்டியலில் இடம்பெற்றுள்ள ஏழு சின்னங்கள், புதிய கட்சிகளுக்காக கமிஷன் தயாரித்து வைத்துள்ள இலவச சின்னப் பட்டியலில் உள்ளன என வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. பொதுவாக, முதலில் மனு அளிக்கும் கட்சிகளுக்கே முன்னுரிமை வழங்கப்படுவது நடைமுறையாகும்.
அரசியல் விமர்சகர்கள் கூறுவதாவது : “சின்னங்கள் எளிதில் அடையாளம் காணக்கூடியதாகவும், மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களில் தெளிவாகத் தெரியும் வகையிலும் தேர்ந்தெடுக்கப்படுவது வழக்கம். ஒரு கட்சியின் சின்னம், வேட்பாளர் பெயருக்குச் சமமான தாக்கத்தை ஏற்படுத்தும்,” என தெரிவித்தனர்.
‘விசில்’ சின்னம் – பின்னணி என்ன?
2019ஆம் ஆண்டு விஜய் நடித்த பிகில் திரைப்படம் தமிழில் வெளியாகி வெற்றி பெற்றது. அதே படம் தெலுங்கில் ‘விசில்’ என்ற பெயரில் வெளியானது. அதன்பின், 2024ஆம் ஆண்டு வெளியான தி கோட் படத்தில் இடம்பெற்ற “சத்தம் பத்தாது விசில்போடு” பாடல் ரசிகர்களிடையே வைரலானது.
இந்த “விசில்” எனும் சொல்லே ரசிகர்கள் மத்தியில் விஜயுடன் இணைந்த பிரபலமான அடையாளமாக மாறியதால், அதையே கட்சிச் சின்னமாகப் பெற்றால் மக்களுக்கு எளிதில் நினைவில் நிற்கும் என தவெக தலைவர் விஜய் கருதுகிறார்.
சின்னம் பெறும் நடைமுறை :
புதிய பதிவு செய்யப்பட்ட அரசியல் கட்சிகள், தேர்தல் கமிஷன் வெளியிட்ட பொதுவான சின்னப் பட்டியலிலிருந்து தங்களுக்கு விருப்பமான சின்னத்தைத் தேர்வு செய்து மனு அளிக்கலாம்.
கமிஷன் அதிகாரிகள் ஒவ்வொரு கோரிக்கையையும் ஆய்வு செய்து, ஏற்கனவே ஒதுக்கப்பட்ட சின்னங்களை நகலாக பயன்படுத்த முடியாது என உறுதிப்படுத்துவர். அனைத்து சரிபார்ப்புகளும் முடிந்த பிறகு, முதலில் விண்ணப்பித்தவர்களுக்கு முன்னுரிமை அடிப்படையில் சின்னங்கள் ஒதுக்கப்படும்.
மொத்தத்தில், விஜயின் தவெக கட்சி “விசில்” சின்னத்தைத் தேர்வு செய்திருப்பது, ரசிகர்கள் மத்தியில் ஆவலை கிளப்பியிருக்கிறது. அடுத்ததாக, தேர்தல் கமிஷன் எந்த சின்னத்தை ஒதுக்குகிறது என்பதுதான் அரசியல் வட்டாரங்களில் ஆர்வத்துக்கு இடமாகியுள்ளது.


















