திருச்சி : 2026 சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு, தமிழக வெற்றிக் கழக தலைவர் நடிகர் விஜய், இன்று தனது தேர்தல் பரப்புரையை திருச்சியில் தொடங்குகிறார்.
‘தமிழ்நாடு… உங்க விஜய்… நா வாரேன்’ என்ற பெயரில் நடைபெறும் இந்த வெற்றிப் பேரணிக்கான இலச்சினையை தவெக தலைமை நேற்று வெளியிட்டது.
இன்று காலை 10.30 மணியளவில் திருச்சி மரக்கடை பகுதியில் உள்ள எம்.ஜி.ஆர் சிலை அருகே விஜய் மக்களைச் சந்தித்து உரையாற்றுகிறார். தொடர்ந்து பிற்பகல் 1 மணியளவில் அரியலூர் அண்ணா சிலை அருகே, மாலை 4 மணியளவில் குன்னம் பேருந்து நிலையம் அருகே, மாலை 5.30 மணியளவில் பெரம்பலூர் மேற்கு வானொலி திடலில் அவர் பரப்புரை நிகழ்ச்சிகளில் பங்கேற்க உள்ளார்.
விஜயின் மக்கள் சந்திப்பு நிகழ்ச்சிக்கு 21 நிபந்தனைகளுடன் காவல் துறை அனுமதி அளித்துள்ளது. பாதுகாப்பு காரணங்களால் மாவட்ட காவல் துறையினர் கடும் பாதுகாப்பு ஏற்பாடுகளை மேற்கொண்டு வருவதோடு, போக்குவரத்து மாற்றங்களும் செய்யப்பட்டுள்ளன. மேலும், விதிக்கப்பட்ட நிபந்தனைகளை மீறினால், பரப்புரையை இடையிலேயே நிறுத்த காவல்துறையினருக்கு அதிகாரம் வழங்கப்பட்டுள்ளது.
விஜயின் தேர்தல் பிரசாரத்தால் தவெக கட்சியினரிடம் உற்சாகம் நிலவினாலும், விதிமீறல் ஏற்பட்டால் வழக்குகள் பதிவு செய்யப்படுமா என்ற அச்சமும் காணப்படுகிறது. இதனை முன்னிட்டு, எவ்வாறு செயல்பட வேண்டும் என்பதற்கான அறிவுறுத்தல்களை கட்சி தலைமை வழங்கியுள்ளது.
