தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய், தனது கட்சியின் முதல் பெரிய தேர்தல் சுற்றுப்பயணத்தை திருச்சியில் இருந்து தொடங்க உள்ளார்.
2026 சட்டமன்றத் தேர்தல் நெருங்கி வரும் நிலையில், கட்சியை வலுப்படுத்தும் பணிகளில் தீவிரமாக செயல்பட்டு வரும் விஜய், சமீபத்தில் நடைபெற்ற இரண்டாவது மாநில மாநாட்டில் விரைவில் மக்கள் சந்திப்பு பயணத்தை ஆரம்பிப்பதாக அறிவித்திருந்தார்.
அதன்படி, சிறப்பு பிரச்சார வேன் தயாராகியுள்ள நிலையில், வரும் செப்டம்பர் 13ஆம் தேதி திருச்சி ஸ்ரீரங்கம் பகுதியில் இருந்து விஜய் தனது தேர்தல் சுற்றுப்பயணத்தை தொடங்க உள்ளார். இதற்கான அனுமதி கோரி, கட்சியின் பொதுச்செயலாளர் புஸ்ஸி ஆனந்த் திருச்சி மாநகர காவல் துறை ஆணையரிடம் மனு சமர்ப்பிக்க உள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது.
இந்த பயணத்தை முன்னிட்டு இன்று திருச்சி வந்த புஸ்ஸி ஆனந்த், விமான நிலையம் வெளியே உள்ள திருச்சி-புதுக்கோட்டை சாலையில் வல்லவ விநாயகர் கோவிலில் சிறப்பு வழிபாடு செய்தார்.
வெற்றிக் கழகத்தின் சுற்றுப்பயணம் மொத்தம் 10 வாரங்கள் நடைபெற உள்ளதாகவும், இது 3 கட்டங்களாக திட்டமிடப்பட்டுள்ளதாகவும் தெரிகிறது. மேலும், நிர்வாக வசதிக்காக மாநிலம் 120 பகுதிகளாக பிரிக்கப்பட்டுள்ள நிலையில், விஜய் தினமும் இரண்டு மாவட்டங்களைச் சந்திக்கும் வகையில் அட்டவணை வடிவமைக்கப்பட்டு வருகிறது.
தமிழகத்தில் தேர்தல் சூழ்நிலை சூடுபிடித்துள்ள நிலையில், விஜயின் இந்த பிரச்சாரப் பயணம் அரசியல் வட்டாரத்தில் பெரும் கவனத்தை ஈர்த்துள்ளது.