திருவாரூர் :
தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய் தனது தேர்தல் பிரசாரத்தை கடந்த 13ஆம் தேதி திருச்சியில் தொடங்கியிருந்தார். அதன் தொடர்ச்சியாக, இன்று நாகை மற்றும் திருவாரூர் மாவட்டங்களில் அவர் மக்களை சந்தித்து உரையாற்றுகிறார்.
சென்னையில் இருந்து நாகை வந்த விஜய், காலை 11 மணியளவில் வாஞ்சூர் ரவுண்டானா பகுதியில் மக்களுடன் கலந்துரையாடினார். தொடர்ந்து நாகூர், தெற்கு பால்பண்ணைச்சேரி, வடகுடி சாலை, புத்தூர் ரவுண்டானா, புத்தூர் அண்ணா சிலை பகுதிகளிலும் அவர் பிரசாரம் மேற்கொள்கிறார்.
நாகை சுற்றுப்பயணத்தை முடித்துக்கொண்டு பிற்பகல் 2 மணியளவில் விஜய் திருவாரூரில் சென்று, அங்குள்ள தெற்கு வீதியில் மக்களைச் சந்தித்து உரையாற்றுகிறார். இவரது பிரசாரத்துக்கான ஏற்பாடுகளை சம்பந்தப்பட்ட மாவட்ட தவெக நிர்வாகிகள் செய்துள்ளனர். பாதுகாப்பு காரணங்களுக்காக காவல்துறை பல்வேறு நிபந்தனைகளையும் விதித்துள்ளது.
இதற்கிடையே, நாகை மற்றும் திருவாரூர் மக்கள்சந்திப்பு நிகழ்ச்சிகளில் கலந்து கொள்ளும் தொண்டர்களுக்கும் பொதுமக்களுக்கும் 12 வழிகாட்டுதல்களை தவெக பொதுச் செயலாளர் ஆனந்த் அறிவித்துள்ளார்.
அதில்,
தலைவர் விஜய் பயணிக்கும் வாகனத்தை பின்தொடர வேண்டாம்
கர்ப்பிணிகள், முதியோர், சிறார்கள், மாற்றுத்திறனாளிகள் கூட்டத்தில் வருவதைத் தவிர்க்க வேண்டும்
பட்டாசு வெடிப்பது, வரவேற்பு நிகழ்ச்சிகள் நடத்துவது தவிர்க்கப்பட வேண்டும்
போக்குவரத்துக்கு இடையூறு ஏற்படுத்தாதீர்
பேனர்கள், விளம்பர பலகைகள் போன்றவை அனுமதி பெறாமல் வைக்கக் கூடாது
சட்டம்-ஒழுங்கை மதித்து காவல்துறைக்கு ஒத்துழைக்க வேண்டும்
ஆம்புலன்ஸ் மற்றும் பள்ளி வாகனங்களுக்கு தடங்கல் ஏற்படுத்தக்கூடாது
நிகழ்ச்சி முடிந்ததும் அமைதியாக கலைந்து செல்ல வேண்டும்
எனவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
விஜயின் இன்றைய நாகை – திருவாரூர் பிரசார நிகழ்ச்சிகளில் ஆயிரக்கணக்கான மக்கள் பங்கேற்பர் என எதிர்பார்க்கப்படுகிறது.