சென்னையில் 2 நாள்கள் தேர்தல் பரப்புரை செய்யும் விஜய் – அனுமதி கோரி போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் மனு

சென்னை: தமிழக வெற்றிக் கழக தலைவர் விஜய் சென்னையில் தேர்தல் பிரசாரம் மேற்கொள்ளத் திட்டமிட்டுள்ளார். இதற்கான அனுமதி கோரி, சென்னை மாவட்ட தவெக செயலாளர்கள் இன்று சென்னை மாநகர காவல் ஆணையர் அலுவலகத்தில் மனு தாக்கல் செய்துள்ளனர்.

விஜய் மக்கள் சந்திப்பு பயணம் கடந்த சனிக்கிழமை திருச்சியில் தொடங்கியது. அங்கு விமான நிலையத்திலிருந்து காந்தி மார்க்கெட் வரை பிரசார வாகனத்தில் சென்ற விஜயை காண தொண்டர்கள் திரளாகக் கூடியதால், குறுகிய தூரத்தையும் கடக்க பல மணி நேரம் எடுத்தது. அதன் பின்னர் அரியலூர், குன்னம் உள்ளிட்ட பகுதிகளிலும் பெரிய அளவில் கூட்டம் திரண்டது. எனினும் நேரம் கடந்ததால் பெரம்பலூரில் நடைபெற இருந்த பிரசாரம் ரத்து செய்யப்பட்டது. இதனால், தொண்டர்கள் ஏமாற்றம் அடைந்தனர்.

விஜயின் அடுத்த கட்ட பிரசாரம் வரும் சனிக்கிழமை நாகை மாவட்டத்தில் நடைபெற உள்ளது. அதன்பின், சென்னையில் தேர்தல் பரப்புரை மேற்கொள்வதற்காக, வரும் 27 ஆம் தேதி வடசென்னையிலும், அடுத்த மாதம் 25 ஆம் தேதி தென்சென்னை மற்றும் செங்கல்பட்டிலும் பொதுக்கூட்டம் நடத்தத் திட்டமிடப்பட்டுள்ளது.

இந்த திட்டத்திற்கான அனுமதி கோரி, சென்னை மாவட்ட தவெக நிர்வாகிகள் போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் மனு தாக்கல் செய்துள்ளனர். மனுவை ஆய்வு செய்து விரைவில் முடிவு எடுக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Exit mobile version