சென்னை: தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய், இடைவேளைக்குப் பிறகு மீண்டும் தனது பரப்புரை பயணத்தை தொடங்க உள்ளார். இதற்கான முதல் கட்ட தகவலாக, வரும் டிசம்பர் 4ஆம் தேதியன்று சேலம் நகரில் மக்கள் சந்திப்பு நிகழ்ச்சியை நடத்த தவெக நிர்வாகிகள் காவல்துறையிடம் அனுமதி கோரியுள்ளனர்.
கடந்த செப்டம்பர் 27ஆம் தேதி கரூர் வேலுச்சாமிபுரத்தில் நடைபெற்ற தவெக பொதுக்கூட்டத்தின் போது ஏற்பட்ட கூட்ட நெரிசலில் 41 பேர் உயிரிழந்ததைத் தொடர்ந்து, கட்சியின் பரப்புரை நடவடிக்கைகள் தற்காலிகமாக நிறுத்தப்பட்டிருந்தன. ஒரு மாதம் கழித்து நிர்வாக செயல்பாடுகள் மீண்டும் வேகமடைந்த நிலையில், அண்மையில் மாமல்லபுரத்தில் கட்சியின் சிறப்பு பொதுக்குழுக் கூட்டமும் நடைபெற்றது.
இதன் தொடர்ச்சியாக, விஜய் தனது அடுத்த கட்ட பயணத்தை சேலத்தில் மக்கள் சந்திப்பு மூலம் தொடங்க திட்டமிட்டுள்ளார். அங்கு பொதுக்கூட்டம் நடத்த கோட்டை மைதானம், போஸ் மைதானம், சீலநாயக்கன்பட்டி உள்ளிட்ட மூன்று இடங்களில் ஏதேனும் ஒன்றை ஒதுக்க அனுமதி வழங்குமாறு சேலம் மாநகர காவல் ஆணையர் அலுவலகத்தில் தவெக நிர்வாகிகள் மனு சமர்ப்பித்துள்ளனர். மேலும் பாதுகாப்பு ஏற்பாடுகளும் கோரப்பட்டுள்ளன.
கடந்த முறை விஜயின் மக்கள் சந்திப்பு அதிகமாக வார இறுதிகளில் மட்டுமே நடைபெற்றது. ஆனால் இம்முறை வார நாட்களிலும் நடத்தும் திட்டம் தீட்டப்பட்டுள்ளது. அதன்படி, அடுத்த வியாழக்கிழமையே சேலத்தில் விஜய் மக்கள் சந்திப்பில் கலந்துகொள்ள வாய்ப்புள்ளதாக தகவல்கள் உறுதிப்படுத்துகின்றன.
ஒரு வாரத்தில் இரண்டு நாட்கள், இரண்டு மாவட்டங்கள் என்ற புதிய திட்டத்தின்படி விஜயின் பரப்புரை விரைவில் தொடங்க உள்ளது என்று கட்சி வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.
















