சென்னை பனையூர் :
தமிழக வெற்றிக் கழகம் (தவெக) இரண்டாம் கட்ட உறுப்பினர் சேர்க்கைக்கான புதிய செயலியை கட்சித் தலைவர் விஜய் இன்று அறிமுகம் செய்தார். தலைமை அலுவலகத்தில் நடைபெற்ற நிகழ்வில், பொதுச்செயலாளர் ஆனந்த், ஆதவ் அர்ஜூனா உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
கட்சி தொடங்கிய இரண்டாண்டுகள் கடந்த நிலையில், உறுப்பினர் சேர்க்கையை மேலும் வலுப்படுத்தும் நோக்கத்தில் இந்த செயலி உருவாக்கப்பட்டுள்ளது. இதற்கு முந்தைய கட்டத்தில், இணையதளம், வாட்ஸ்அப், டெலிகிராம் உள்ளிட்ட சமூக ஊடகங்களை பயன்படுத்தி உறுப்பினர் சேர்க்கை நடைமுறையில் இருந்தது.
இந்த புதிய செயலி நிர்வாகிகளுக்காக உருவாக்கப்பட்டுள்ளது. இதன் வழியாக உறுப்பினர் சேர்க்கை திட்டம் இப்போது மேலும் விரிவடைகிறது. அதே நேரத்தில், “வெற்றி பேரணியில் தமிழ்நாடு” எனும் பரப்புரை இயக்கத்தையும் விஜய் தொடங்கி வைத்தார்.
நிகழ்ச்சியில் உரையாற்றிய விஜய், “1967, 1977 தேர்தல்களில் நடந்தது போல், 2026-ல் தமிழ்நாட்டில் மாற்றத்தை மக்கள் உருவாக்குவார்கள். அந்த தேர்தல்களில் ஆட்சியை எதிர்த்து, புதிதாக வந்தவர்கள் வென்றார்கள். 2026-லும் அதே வரலாறு திரும்பும்,” என நம்பிக்கையுடன் தெரிவித்தார்.
அண்ணாவின் “மக்களிடம் செல், மக்களிடம் இருந்து கற்றுக்கொள், மக்களுடன் வாழ்” என்ற வரிகளை மேற்கோளாக கூறிய அவர், மக்கள் மையம் தான் தவெக பயணத்தின் அடிப்படை என வலியுறுத்தினார்.