திருச்சி: நடிகரும், தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவருமான விஜய் இன்று திருச்சியில் தனது ‘மக்கள் சந்திப்பு பிரசாரம்’ தொடக்கத்தை வைத்தார்.
முன்னதாக திருச்சி விமான நிலையத்தில் விஜய்க்கு மேளதாளம், உற்சாகக் கோஷங்களுடன் வரவேற்பு அளிக்கப்பட்டது. விமான நிலையத்திலிருந்து 5 மணி நேரம் கழித்து மரக்கடை அருகே உள்ள எம்ஜிஆர் சிலை அருகே அவர் பிரசாரக் கூட்டம் நடைபெறும் இடத்திற்கு வந்தார். இதனால் 8 மணி நேரமாக காத்திருந்த தொண்டர்கள் சற்று ஏமாற்றமடைந்தனர்.
பிரசாரக் கூட்டத்தில் விஜய் பேசியதாவது :
“பண்டைய காலங்களில் போருக்கு செல்லும் முன், வீரர்கள் தங்களது குலதெய்வக் கோவிலுக்கு சென்று வணங்கி பிறகே போருக்கு சென்றார்கள். அதுபோல வரவிருக்கும் ஜனநாயகப் போருக்கு முன், உங்களைப் பார்த்து பேச வேண்டுமென்று வந்துள்ளேன்.
சில நல்ல காரியங்களைத் திருச்சியில் தொடங்கினால், அது திருப்புமுனையாக அமையும் எனப் பெரியவர்கள் சொல்வார்கள். அதற்கு உதாரணமாக 1956-ல் அண்ணாதுரை முதன்முதலில் தேர்தலில் நிற்க முடிவு செய்ததும், 1974-ல் எம்ஜிஆர் முதல் மாநில மாநாட்டை நடத்தியதும் திருச்சியில்தான். கல்வி, மதச்சார்பின்மை, நல்லிணக்கம் ஆகியவற்றின் மையமாக இருக்கும் மண் இது,” என்றார்.
மேலும், தற்போதைய அரசைக் குறித்தும் விஜய் விமர்சனம் மேற்கொண்டார். “காஸ் சிலிண்டருக்கு மானியம் தருவோம் என்றீர்களே, செய்தீர்களா? டீசல் விலையை குறைப்போம் என்றீர்களே, செய்தீர்களா? கல்விக் கடனை ரத்து செய்வோம் என்று சொன்னீர்களே, செய்தீர்களா? திமுகவின் தேர்தல் வாக்குறுதிகள் நிறைவேற்றப்படவில்லை. மகளிர் உரிமைத்தொகை எல்லோருக்கும் கிடைக்கவில்லை. இலவச பஸ்சில் பயணம் செய்வதையும் கூட அவமதிக்கிறார்கள். இப்படி மக்கள் நலன்களை புறக்கணிக்கும் திமுகவுக்கு வரவிருக்கும் தேர்தலில் ஓட்டு போடுவீர்களா?” எனக் கேட்டார்.
இவ்வாறு விஜய் தனது முதல் பிரசார உரையில் அரசின் செயல்பாடுகளை சாடினார்.
