2026 ஆம் ஆண்டு நடைபெற உள்ள தமிழக சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு, அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி கே. பழனிசாமி தலைமையில், “மக்களைக் காப்போம், தமிழகத்தை மீட்போம்” என்ற முழக்கத்துடன் மாநிலம் முழுவதும் பிரச்சாரப் பயணம் நடைபெற்றுவருகிறது.
இந்த நிலையில், ஒரு ஆங்கில நாளிதழுக்கு அளித்த சிறப்பு பேட்டியில், எதிர்வரும் தேர்தலில் அதிமுகதான் தனிப்பெரும்பான்மையுடன் ஆட்சி அமைக்கும் என பழனிசாமி நம்பிக்கை தெரிவித்தார். மேலும், “இது தான் மக்கள் விரும்பும் தீர்வாகும்,” என்றும் கூறினார்.
இதுவரை தமிழகத்தில் பெரும்பாலான ஆட்சிகள் ஒற்றைக் கட்சி ஆட்சியாக இருந்துள்ளன என்றும், அதே மாதிரி நிலைமை மீண்டும் உருவாக வாய்ப்புள்ளதெனவும் அவர் தெரிவித்தார்.
கூட்டணிப் பேச்சுவார்த்தைகள் தொடர்பாக எழுந்த கேள்விக்கு பதிலளித்த பழனிசாமி, “தவெக உடனான கூட்டணிப் பேச்சுவார்த்தை இதுவரை தொடங்கவில்லை” என்று தெளிவுபடுத்தினார். அதேசமயம், “ஆட்சியில் பங்குபெற நாங்கள் ஏமாளிகள் அல்ல” என்ற அவரது கூற்று, அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா, “தமிழகத்தில் தேசிய ஜனநாயகக் கூட்டணி ஆட்சி அமைக்கும்” என கூறியிருப்பதை தொடர்ந்து, பழனிசாமியின் இந்த பேச்சு, பாஜக-அதிமுக இடையிலான உறவில் எதிர்பாராத மாற்றத்துக்குறியை ஏற்படுத்தியிருக்கிறது.
அதே நேரத்தில், நடிகர் விஜயும் நாம் தமிழர் கட்சித் தலைவர் சீமானும், எதிர்வரும் தேர்தலில் தனித்துப் போட்டியிடுவார்களா, அல்லது கூட்டணியில் சேர்வார்களா என்ற கேள்விக்குறியும் இந்த அரசியல் சூழ்நிலையை இன்னும் பரபரப்பாக்கியுள்ளது.