மதுரை மேற்கு சட்டமன்றத் தொகுதிக்குட்பட்ட கீழ மாத்தூர் பகுதியில் சட்டமன்ற மேம்பாட்டு நிதியிலிருந்து ஆரம்ப சுகாதார நிலைய சுற்றுச்சுவர் கட்டுவதற்கான பூமி பூஜை இன்று நடைபெற்றது. இதில், முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜு பங்கேற்றார். அங்குச் செய்தியாளர்களைச் சந்தித்த செல்லூர் ராஜு, “அதிமுக ஆட்சியில் தமிழ்நாடு அமைதிப்பூங்காவாக இருந்தது. திமுக ஆட்சியில் பெண்களுக்கு பாதுகாப்பு இல்லை.
நாங்கள் களத்தில் இருக்கிறோமா? இல்லையா? என்பதை மக்கள்தான் தீர்மானிப்பார்கள். 2026 சட்டமன்றத் தேர்தலில் அதிமுக தலைமையிலான கூட்டணி வெற்றி பெற்று எடப்பாடி பழனிசாமி முதலமைச்சராவார். நேற்று வந்த விஜய்க்கு பதில் சொல்ல வேண்டிய அவசியம் எனக்கில்லை.
வடிவேலு, நயன்தாராவை அழைத்து பிரசாரம் மேற்கொண்டாலும் கூட்டம் வரத்தான் செய்யும். நடிகர்களுக்கு ரசிகர்கள் உள்ளதால் கூட்டம் கூடத்தான் செய்யும். விஜய்க்கு கூடுதல் ரசிகர்கள் வேண்டுமானாலும் கூட இருக்கலாம். மலேசியாவில் கூட சஸ்பென்ஸ் என சூசகமாக பேசுகிறார் விஜய். எல்லோரும் எம்.ஜி.ஆராக வேண்டுமென்றால் ஒன்றும் செய்ய முடியாது. வானத்தில் ஒரு சந்திரன், பூமியில் ஒரு ராமசந்திரன் தான்.
ஊழலை ஒழிப்பேன் என்று சொல்லி கட்சி தொடங்கிய கமல்ஹாசனே ஒரு சீட்டுக்காக திமுகவிற்கு போய்விட்டார். கமல்ஹாசனை போல் விஜய் ஆகிவிடக்கூடாது. விஜய் ஓவர் கான்ஃபிடன்ஸ் வைத்துவிட்டால் ஒன்றும் நடக்காது. விஜய் எந்த தேர்தலில் நின்று வெற்றி பெற்றுள்ளார்? எந்த இடத்தில் மக்களுக்காக பணியாற்றியுள்ளார்?
விஜய் புதிதாக வந்துள்ளார், அவரை விமர்சனம் செய்ய விரும்பவில்லை. விஜய் கட்சி தொடங்க வேண்டும் என்று சொன்னவன் தான் நான். ஆனால் எல்லோரும் எம்.ஜி.ஆர் ஆக முடியாது. கூட்டணி என்பது தேர்தல் பார்ட்னர் என எடப்பாடி பழனிசாமி சொல்லிவிட்டார். நாங்கள் யாரும் கொள்கை கூட்டணி கிடையாது. திருமாவளவன், காங்கிரஸ், கம்யூனிஸ்ட் கொள்கை கூட்டணியா? அவர்கள் அதை ஏற்றுக்கொள்வார்களா? அண்ணாவும் கொள்கையில் முரண்பட்ட கட்சியை அழைத்து கூட்டணி வைத்தவர்தான்.
அதிமுக களத்தில் இல்லை என்று சொல்வது முட்டாள்தனத்திலும், முட்டாள்தனம். அதிமுக களத்தில் இல்லை என்று சொல்பவருக்கு எவ்வளவு தைரியம்? அவர் நாவை அடக்கி பேச வேண்டும்” என்றார்.
