நாகை : தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய், தனது மக்கள் சந்திப்பு பிரச்சாரத்தின் இரண்டாம் கட்டமாக இன்று நாகை மாவட்டத்தை அடைய உள்ளார். 2011ஆம் ஆண்டு மீனவர் பிரச்சனைக்காக கடைசியாக நாகை வந்த விஜய், 14 ஆண்டுகள் கழித்து மீண்டும் மக்கள் மத்தியில் சந்திப்புக்காக வருகிறார் என்பதால், தொண்டர்களிடம் பெரும் உற்சாகம் நிலவுகிறது.
சென்னையிலிருந்து தனி விமானம் மூலம் திருச்சிக்கு புறப்பட்ட விஜய், அங்கிருந்து சாலை மார்க்கமாக சுமார் 145 கிமீ தூரம் பயணம் செய்து நாகையை அடையவுள்ளார். மாவட்ட எல்லையான வாஞ்சூர் ரவுண்டானாவில் அவருக்கு சிறப்பு வரவேற்பு அளிக்க திட்டமிடப்பட்டுள்ளது. பின்னர் புத்தூர் அண்ணாசிலை சந்திப்பு பகுதியில் அவர் பிரச்சாரம் மேற்கொள்ள உள்ளார்.
விஜய் வருகையை முன்னிட்டு நாகை முழுவதும் தவெக தொண்டர்கள் ஏற்கனவே குவிந்து வருகிறார்கள். “திருச்சி பிரச்சாரத்திலேயே மக்கள் தவெக தான் நம்பர் 1 என்று தீர்மானித்துவிட்டனர். அதை உறுதிப்படுத்தும் வகையில் நாகையில் நடைபெறும் கூட்டம் வரலாற்று சிறப்புமிக்கதாக இருக்கும்” என தொண்டர்கள் தெரிவித்துள்ளனர்.
மேலும், “2011இல் மீனவர் உரிமைக்காக குரல் கொடுத்த விஜய், இப்போது தமிழக மக்களின் நலனுக்காக நாகை மண்ணை அடைகிறார். அவர் வருகை கடவுள் இறங்கி வந்து காட்சி அளிப்பதைப் போன்றது. எம்ஜிஆர், அண்ணா, காமராசர் போல சிறந்த ஆட்சியை வழங்கக் கூடியவர் விஜய் தான். திமுக ஆட்சியை மாற்றும் பெரிய சக்தியாக அவர் உருவெடுக்கிறார்” என தொண்டர்கள் உற்சாகத்துடன் கூறினர்.
