சென்னை :
தமிழக வெற்றிக் கழகத்தின் (தவெக) இரண்டாம் கட்ட உறுப்பினர் சேர்க்கையை முன்னெடுக்க, புதிய செயலியை கட்சித் தலைவர் விஜய் இன்று அறிமுகம் செய்துவைத்தார். சென்னை பனையூரில் உள்ள தவெக தலைமையகத்தில் நடைபெற்ற சிறப்புவிழாவில் இந்த செயலி வெளியிடப்பட்டது.
தவெகா தொடங்கப்பட்டு இரண்டு ஆண்டுகள் கடந்துள்ள நிலையில், கட்சியை வலுப்படுத்தும் நடவடிக்கையாக உறுப்பினர் சேர்க்கை முன்னெடுக்கப்படுகிறது. இதற்காக கடந்த ஆண்டு இணையதளம், வாட்ஸ்அப், டெலிகிராம் போன்ற சமூக வலைதளங்களை பயின்று உறுப்பினர் சேர்க்கை செய்யும் முயற்சி மேற்கொள்ளப்பட்டது.
தற்போது, கட்சி நிர்வாகிகளுக்காக பிரத்யேகமாக உருவாக்கப்பட்டுள்ள புதிய செயலியின் வாயிலாக உறுப்பினர் சேர்க்கை மேற்கொள்ளப்படுகிறது. இதில் மாவட்ட செயலாளர்கள் மற்றும் வாக்குச்சாவடி முகவர்களுக்கு மட்டுமே Access வழங்கப்பட்டுள்ளது.
வாக்குச்சாவடி முகவர்கள், செயலியில் உள்ள வாக்காளர் பட்டியலை அடிப்படையாகக் கொண்டு, வீட்டிற்கு நேரில் சென்று உறுப்பினர்களை சேர்த்திடவேண்டும். உறுப்பினர் சேர்க்கை நேரில் சந்தித்து மட்டுமே செய்யப்பட வேண்டிய வகையில், இந்த செயலியில் ஜியோ மேப்பிங் தொழில்நுட்பம் பயன்படுத்தப்பட்டுள்ளது. இதன் மூலம், தவறான தகவல்களோ அல்லது வேறு இடத்திலிருந்து உறுப்பினராக சேர்வதற்கான சாத்தியக்கூறுகளோ நீக்கப்பட்டுள்ளன.
மேலும், புதிய செயலியின் மூலம் உறுப்பினர் சேர்க்கை மட்டுமின்றி, கட்சியில் சேராமல் வெளியே இருந்து ஆதரவு தர விரும்பும் நபர்களின் விவரங்களும் பதிவு செய்யும் வசதி கொண்டுள்ளது.
இந்த நிகழ்ச்சியில் தவெகா பொதுச் செயலாளர் ஆனந்த், ஆதவ் அர்ஜூனா உள்ளிட்ட தலைவர்கள் பங்கேற்றனர். இதனைத் தொடர்ந்து, “வெற்றி பேரணியில் தமிழ்நாடு” என்ற பரப்புரை இயக்கத்தையும் விஜய் தொடங்கி வைத்தார்.