சென்னை: நடிகரும் தமிழக வெற்றி கழக தலைவருமான விஜய், கரூரில் நிகழ்ந்த கூட்ட நெரிசல் விபத்தில் உயிரிழந்தோரின் குடும்பத்தினரை நேற்று மாமல்லபுரத்தில் நேரில் சந்தித்தார். அந்தச் சந்திப்பில் நடந்த சில நிகழ்வுகள் தற்போது சமூக வலைதளங்களில் பெரும் கவனத்தை ஈர்த்துள்ளன.
மாமல்லபுரத்தில் உள்ள ஒரு தனியார் ரிசார்ட்டில் நடைபெற்ற இந்தச் சந்திப்பு ஊடகங்களுக்கும், கட்சி நிர்வாகிகளுக்கும் அனுமதி இல்லாமல் அமைதியாக நடைபெற்றது. தகவலின்படி, சுமார் 50 அறைகள் முன்பதிவு செய்யப்பட்டு, கரூரிலிருந்து 37 குடும்பங்கள் அழைத்து வரப்பட்டிருந்தனர்.
பாதிக்கப்பட்ட குடும்பத்தினர் அனைவரும் முன் கூடியபோது, விஜய் கைகளை கூப்பி கண்ணீருடன் அவர்களை பார்த்தார். அந்தநேரத்தில் திடீரென மண்டியிட்டு, தனது நெற்றியை தரையில் தொட்டு, “இந்த துயரமான சம்பவம் நடந்ததற்கு மனமார்ந்த மன்னிப்பு கேட்டுக்கொள்கிறேன்” என கூறியதாகக் கூறப்படுகிறது.
அங்கு இருந்த சில குடும்பத்தினர் கண்கலங்கினர்; சிலர் விஜயை எழுப்ப முயன்றனர். உணர்ச்சி வசப்பட்ட விஜய், “இது எனக்கு ஒரு வேதனையான பாடம். தலைவராக எனக்கு மிகப்பெரிய பொறுப்பு இருப்பதை இச்சம்பவம் நினைவூட்டியது,” என தெரிவித்தார்.
மேலும், எதிர்காலத்தில் கட்சியின் அனைத்து நிகழ்வுகளிலும் பொதுமக்களின் பாதுகாப்புக்கு முன்னுரிமை வழங்கப்படும் என்றும் உறுதியளித்தார். உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு நிதி மற்றும் கல்வி உதவி உள்ளிட்ட அனைத்து நடவடிக்கைகளையும் தனிப்பட்ட முறையில் கவனிப்பதாகவும் விஜய் உறுதியளித்தார்.
அந்த நாள் மதிய உணவும் குடும்பத்தினருக்காக ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. நிகழ்வின் இறுதியில், “நான் உங்களது குடும்பத்தின் ஒருபாகம் தான். விரைவில் கரூரில் வந்து உங்களை மீண்டும் சந்திப்பேன்,” என விஜய் கூறியதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
