திருநெல்வேலியில் இன்று (ஆகஸ்ட் 22) நடைபெறும் பாஜக பூத் கமிட்டி மண்டல மாநாட்டில் மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா பங்கேற்கிறார். இந்த நிகழ்ச்சியில் பங்கேற்பதற்காக பாஜக உறுப்பினரும் நடிகருமான சரத்குமார், சென்னையில் இருந்து விமானம் மூலம் தூத்துக்குடி வாகைகுளம் விமான நிலையம் வந்தடைந்தார்.

அங்கு நிருபர்களை சந்தித்த அவர் கூறியதாவது:
“மிஸ்டர் பிரைம் மினிஸ்டர் என்று சொல்லக்கூடிய அளவிற்கு நடிகர் விஜய் அரசியலில் இன்னும் வளரவில்லை. பாசிசம் என்றால் என்ன என்பது அவருக்கே தெரியுமா என்பது கூட சந்தேகமே.
நடிகர்கள் அரசியலுக்கு வருவதை நான் வரவேற்கிறேன். இளைஞர்களும் அரசியலுக்கு வரவேண்டும். ஆனால் என்ன பேசுகிறோம், யாரைப் பற்றி பேசுகிறோம், எதற்காக பேசுகிறோம் என்பதில் கவனம் வேண்டும். நடிகர் விஜய் கொள்கை ரீதியாக பேச வேண்டும்” என்று தெரிவித்தார்.
மேலும், ஆகஸ்ட் 24-ஆம் தேதி கள்ளக்குறிச்சியில் விரிவாக பேசுவேன் என்றும் அவர் கூறினார்.
















