கரூர் கூட்ட நெரிசல் விபத்தில் 41 பேர் உயிரிழந்த சம்பவத்துக்கு முழுப் பொறுப்பும் தவெக தலைவர் விஜய்க்கே உண்டு என்று மதிமுக பொதுச் செயலாளர் வைகோ கடுமையாக விமர்சித்துள்ளார்.
இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், “செப்டம்பர் 27ஆம் தேதி கரூரில் நடந்த தவெக கூட்டத்தில் ஏற்பட்ட கூட்ட நெரிசலில் குழந்தைகள், பெண்கள் உட்பட 41 பேர் உயிரிழந்தனர். அந்த துயர சம்பவத்துக்குப் பின்னரும், விஜய் அவர்களுக்கு எந்தவிதப் பொறுப்புணர்வும் இல்லை. மாறாக, திசைதிருப்பும் நோக்கத்துடன் தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலினை குறை கூறியுள்ளார்,” என்று வைகோ குற்றம்சாட்டினார்.
“அந்த நாளில் ஆயிரக்கணக்கான மக்கள் கூடியிருந்த நிலையிலும் பாதுகாப்பு, குடிநீர், மருத்துவ வசதிகள் போன்ற அடிப்படை ஏற்பாடுகள் எதுவும் செய்யப்படவில்லை. சம்பவத்திற்குப் பின்னரும் விஜய் உடனே சென்னைக்குத் திரும்பியுள்ளார். குறைந்தபட்சம் மறுநாளாவது உயிரிழந்தோரின் குடும்பங்களை நேரில் சந்தித்து ஆறுதல் கூறியிருக்கலாம். ஆனால் அவர் அதைச் செய்யவில்லை.
இப்போது ஒரு மாதம் கழித்து தான் அந்த குடும்பங்களை சென்னைக்கு வரவழைத்து போலியான பச்சாதாபத்தை வெளிப்படுத்துகிறார். இது பொறுப்பற்ற செயல்,” என வைகோ கடும் அதிருப்தி தெரிவித்துள்ளார்.
“சம்பவம் நடந்த உடனே முதல்வர் ஸ்டாலின், அமைச்சர்களையும், அதிகாரிகளையும் சம்பவ இடத்துக்கு அனுப்பி மருத்துவ உதவிகள் அளிக்கச் செய்தார். பின்னர் அவர் நேரிலேயே கரூருக்குச் சென்று உயிரிழந்தோருக்கு மலர் அஞ்சலி செலுத்தி, குடும்பங்களை ஆறுதல் கூறினார். அதுவே உண்மையான தலைமைத்துவம். ஆனால் விஜய், அரசியல் நாகரிகத்தைக் கடைபிடிக்காமல் தவறான வழியில் நடந்துகொண்டுள்ளார்,” எனவும் வைகோ குறிப்பிட்டார்.
இறுதியாக அவர், “பொதுவாழ்வில் அனுபவமில்லாத விஜய், ஆட்சியை கனவு காணும் அளவுக்கு மாயையில் மிதக்கிறார். இனிமேலாவது நிதானமாக அரசியல் நாகரிகத்துடன் செயல்பட வேண்டும்,” எனவும் வைகோ அறிவித்துள்ளார்.

















