சென்னை : கரூர் கூட்ட நெரிசலில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினரை இன்று காலை தவெக தலைவர் விஜய் நேரில் சந்தித்து ஆறுதல் கூறியுள்ளார். மாமல்லபுரத்தில் உள்ள ஒரு தனியார் ஹோட்டலில் நடைபெற்ற இந்த நிகழ்வில், மொத்தம் 37 குடும்பங்கள் கலந்து கொண்டனர்.
கடந்த செப்டம்பர் 27 ஆம் தேதி கரூர் வேலுச்சாமிபுரத்தில் நடந்த தவெக பொதுக்கூட்டத்தில் ஏற்பட்ட துயர நெரிசலில் 41 பேர் உயிரிழந்தனர். அப்போது வீடியோ வழியாக ஆறுதல் தெரிவித்துள்ளார் விஜய். பாதிக்கப்பட்டவர்களை நேரில் சந்திப்பதாகவும் உறுதியளித்திருந்தார்.
அதன்படி, காவல் அனுமதி சிக்கலின் காரணமாக பாதிக்கப்பட்ட குடும்பங்களை சென்னைக்கு அழைத்து வர ஏற்பாடு செய்யப்பட்டு, அவர்கள் இன்று மாமல்லபுரம் பார் பாயிண்ட்ஸ் ஹோட்டலில் விஜய்யை சந்தித்தனர். தவெக நிர்வாகிகள் நேற்று காலை முதலே மாவட்டங்களுக்கு சென்று, அந்த குடும்பங்களை 5 பேருந்துகளில் அழைத்து வந்தனர்.
இந்நிகழ்வில் காயம் அடைந்த 110 பேரும் தங்களது குடும்பத்தினருடன் கலந்து கொண்டனர். அவர்களுக்கு விஜய் தலா ₹2 லட்சம் நிவாரணத் தொகையை நேரடியாக வழங்கினார்.
அதேபோல், பலியானோரின் குடும்பங்களுக்கு ₹20 லட்சம் நிவாரணத் தொகை தவெக சார்பில் ஏற்கனவே வங்கி கணக்குகள் வழியாக அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.
நிகழ்வின் போது, ஒவ்வொரு குடும்பத்தாருடனும் தனிப்பட்ட முறையில் பேசிச் செவிமடுக்கி, கண்ணீருடன் ஆறுதல் தெரிவித்தார் விஜய். அவர்களிடம், சுயதொழில் தொடங்குதல், வீட்டு வசதி, கடன் நிவாரணம் போன்ற தேவைகள் குறித்த கோரிக்கைகளையும் எழுத்துப்பூர்வமாக பெற்றார்.
கரூர் துயரச் சம்பவத்துக்கு ஒரு மாதம் நிறைவு பெறும் நாளான இன்று, தனது வாக்குறுதியை நிறைவேற்றிய விஜயின் இந்த நடவடிக்கை, ரசிகர்கள் மற்றும் பொதுமக்களிடையே பாராட்டை ஏற்படுத்தியுள்ளது.

















