திருச்சி :
தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய் தனது முதல் தேர்தல் பிரச்சாரத்தை திருச்சியில் இன்று தொடங்குகிறார். இதற்காக காவல்துறை 10.30 மணி முதல் 11 மணி வரை மட்டுமே பேச்சு அனுமதி வழங்கியுள்ளது. ஆனால், 11 மணிக்கு இன்னும் 10 நிமிடங்கள் மட்டுமே இருக்கும் நிலையில் விஜய் மரக்கடை பிரச்சார தளத்துக்கு வரவில்லை.
விஜய்க்கு அரை மணி நேரம் மட்டுமே பேச அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. அதற்கு மேல் சென்றால் போக்குவரத்து பாதிப்புகள் ஏற்படும் என்பதால் காவல்துறை கண்டிப்பான கட்டுப்பாடுகளை விதித்துள்ளது. எனவே, 11.01க்கு பின்னரும் அவர் பேசினால், வழக்குப் பதிவு செய்யப்படுமா என்ற கேள்வி எழுந்துள்ளது.
சென்னையிலிருந்து தனி விமானத்தில் திருச்சிக்கு வந்த விஜய்க்கு விமான நிலையத்தில் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. தொண்டர்கள் மீது கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டிருந்தாலும், தடுப்புகளை மீறி கூட்டம் திரண்டது. இதனால் விஜய் தனது பிரச்சார வேனில் ஏறுவதற்கே சிரமம் ஏற்பட்டது. வாகனம் தொண்டர்களின் வெள்ளத்தில் சிக்கி மெதுவாகவே நகர்ந்தது.
விமான நிலையத்திலிருந்து டிவிஎஸ் டோல்கேட், தலைமை தபால் நிலையம், மேலப்புதூர் சுரங்கப்பாதை, பாலக்கரை பிரபாத் ரவுண்டானா, பழைய மதுரை சாலை வழியாக மரக்கடைக்கு விஜய் பயணம் மேற்கொண்டு வருகிறார்.
மரக்கடையில் உரையை முடித்ததும், காந்தி சந்தை, தர்பார் சாலை, பழைய பால் பண்ணை வழியாக அரியலூருக்குத் திரும்புவதாக திட்டம் அமைக்கப்பட்டுள்ளது. ஆனால் இன்னும் அவர் மரக்கடைக்கே வராததால், அனுமதிக்கப்பட்ட நேரத்தை மீற வாய்ப்புள்ளதாகவும், அதனால் சட்ட நடவடிக்கை எடுக்கப்படுமா என்ற பரபரப்பு நிலவுகிறது.