கரூர்: கரூரில் நடந்த கூட்ட நெரிசல் விபத்தில் உயிரிழந்தோரின் குடும்பத்தினரை நடிகரும் தமிழக வெற்றி கழக தலைவருமான விஜய் நேரில் சந்தித்து ஆறுதல் தெரிவித்தார். அந்த சந்திப்பில் ஏற்பட்ட உணர்ச்சிமிகு தருணங்கள் தற்போது சமூக வலைதளங்களில் பரவலாக பேசப்பட்டு வருகின்றன.
மாமல்லபுரத்தில் உள்ள தனியார் நட்சத்திர விடுதிக்கு, கரூரில் உயிரிழந்த 41 பேரின் குடும்பத்தினரையும் ஆம்னி பேருந்துகள் மூலம் அழைத்து வந்து, ஒவ்வொருவரையும் விஜய் தனிப்பட்ட முறையில் சந்தித்தார்.
அந்த நிகழ்வில் கரூர் தாந்தோணிமலை சிவசக்தி நகரைச் சேர்ந்த ஆனந்த ஜோதி என்பவரின் மனைவி ஹேமலதா மற்றும் மகள்கள் சாய் லக்ஷனா, சாய் ஜீவா ஆகியோர் மூவரும் உயிரிழந்தனர். இந்த குடும்பத்தினரை விஜய் தனியாக சந்தித்து ஆறுதல் கூறியபோது, அங்கு நெகிழ்ச்சியூட்டும் தருணம் ஒன்று நிகழ்ந்தது.
“என்னை உங்கள் குடும்பத்தில் ஒருவராக நினைத்து மன்னித்துவிடுங்கள்” என்று விஜய் கூறியபோது, ஆனந்த ஜோதியின் தாயார் அவருடைய காலில் விழுந்து அழுததாக தகவல்கள் தெரிவிக்கின்றன. அதே சமயம், “நீங்கள் வந்து இதையெல்லாம் அனுபவிக்க வேண்டியதில்லை. கோடி கோடியாய் கொடுத்தாலும் நம்ம பேரப்பிள்ளைகள் திரும்ப வருவாங்களா?” என கதறிய தாத்தாவின் வார்த்தைகள் அங்கு இருந்த அனைவரையும் கண் கலங்க வைத்தது.
இந்த சந்திப்பின் போது விஜய் மிகவும் மெலிந்தும் மனக்கவலையுடனும் இருந்ததாக கூறப்படுகிறது. “நடந்த துயர சம்பவம் எனக்கு தெரியாது. ஆனால் உங்கள் குடும்பத்தின் இழப்பை நினைத்து மனம் உடைந்துவிட்டது. எந்த உதவியும் தேவைப்பட்டாலும் தயங்காமல் சொல்லுங்கள் — நான் உங்களுடன் இருக்கிறேன்” என விஜய் கூறியதாக குடும்பத்தினர் தெரிவித்துள்ளனர்.
மனிதாபிமான அடிப்படையில் நடந்த இந்தச் சந்திப்பில், விஜய் எந்த அரசியல் பேச்சும் இன்றி, முழுக்க மனம் நெகிழ்ந்த மனிதராக நடந்து கொண்டார் என கூறப்படுகிறது. அவரது இந்த செயல் பலரின் இதயத்தையும் தொட்ந்துள்ளது.

















