சென்னை : தேர்தல் ஆணையம் நடத்தும் ஆலோசனைக் கூட்டங்களில் தங்களை புறக்கணித்து வருவதாக குற்றம் சாட்டி, தவெக தலைவர் விஜய் அனுப்பிய கடிதம் தற்போது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. குறிப்பாக, சட்டமன்றத் தேர்தல் தொடர்பான கூட்டங்களை நடத்தும் மாநில தலைமை தேர்தல் அதிகாரி என்பதற்குப் பதிலாக, உள்ளாட்சி தேர்தல்களை கவனிக்கும் மாநில தேர்தல் ஆணையர் என குறிப்பிடப்பட்டிருப்பது சமூக வலைதளங்களில் விமர்சனங்களுக்கு வழிவகுத்துள்ளது.
விஜய் அனுப்பியுள்ள கடிதத்தில், “எந்த ஆலோசனைக் கூட்டங்களிலும் தவெகவுக்கு அழைப்பு விடுக்கப்படவில்லை. மாநிலம் முழுவதும் போட்டியிடத் தயாராக உள்ள நிலையில், ஜனநாயக செயல்முறை மேலும் வெளிப்படையாக இருக்க, தவெக-வையும் அழைக்க வேண்டும்” என அவர் வலியுறுத்தியிருந்தார்.
மேலும், தேர்தல் செயல்முறைகளில் சமநிலையும் சமத்துவமும் பேணப்பட வேண்டியது அவசியம் எனவும், வரவிருக்கும் தேர்தல்கள் தொடர்பான அனைத்து கூட்டங்களிலும் தவெக சேர்க்கப்பட வேண்டும் எனவும் அவர் கோரியிருந்தார்.
ஆனால், அந்தக் கடிதத்தில் “மாநில தேர்தல் ஆணையர்” மற்றும் அந்த அலுவலக முகவரி குறிப்பிடப்பட்டிருப்பது விமர்சனத்திற்கு உள்ளாகி இருக்கிறது. சட்டமன்ற, நாடாளுமன்றத் தேர்தல்களை நடத்துவது மாநில தலைமை தேர்தல் அதிகாரியின் பொறுப்பு; உள்ளாட்சி தேர்தல்களுக்கு மாநில தேர்தல் ஆணையர் பொறுப்புடையவர் என்பது நெட்டிசன்களின் குறிப்பு. இதனால், “விஜய் பதவி குழப்பத்திலேயே கடிதம் எழுதியிருக்கிறார்” என்று சிலர் இணையத்தில் கருத்து தெரிவித்துள்ளனர்.
விமர்சனத்துக்கு தவெக தரப்பு விளக்கம்
இதற்கிடையில், தவெக தரப்பு இதற்கு விளக்கம் அளித்துள்ளது.
தவெகவின் கூறுகையில்:
SIR விவகாரத்தில் மட்டும் அல்ல, எந்த தேர்தல் சம்பந்தமான கூட்டமாயினும், தேர்தல் ஆணையம் தனது அரசியல் அதிகாரமான Article 324-ஐ பயன்படுத்தி, தவெகவை அழைக்க வேண்டும் என்பதே விஜய் எழுதியுள்ள கடிதத்தின் உண்மையான நோக்கம்.
மேலும், “கடிதம் ஆணையத்துக்கே அனுப்பப்பட்டுள்ளது; தேவையெனில் அதிகாரிக்கும் (CEO) தனியாகவும் கடிதம் அனுப்பப்படும். இரண்டு அதிகாரிகளின் பொறுப்புகளையும் கருத்தில் கொண்டு தான் இப்படிக் கடிதம் விட்டிருக்கிறோம்” என்று தவெகவினர் தெரிவித்துள்ளனர்.
தவெக தொடர்ந்து SIR தொடர்பான ஆலோசனைகளில் புறக்கணிக்கப்பட்டு வருவதாக குற்றம் சாட்டும் நிலையில், விஜய் எழுதிய சமீபத்திய கடிதம் அரசியல் வட்டாரங்களில் புதிய விவாதத்துக்கு வழிவகுத்துள்ளது.

















