மாமல்லபுரம் : தமிழகத்திலும் புதுச்சேரியிலும் 10ஆம் மற்றும் 12ஆம் வகுப்பு பொதுத் தேர்வில் உயர் மதிப்பெண்கள் பெற்ற மாணவ, மாணவிகளை பாராட்டும் விதமாக, தமிழக வெற்றிக்கழக (தவெக) தலைவர் விஜய் நேரில் அழைத்து பரிசளிக்கும் விழா 2025 ஆண்டிற்காக மூன்று கட்டங்களாக நடத்தப்படுகிறது. இதில் முதல்கட்ட விழா இன்று மாமல்லபுரத்தில் உள்ள ஒரு தனியார் ஹோட்டலில் நடைபெற்றது.
இந்த விழாவில் கலந்து கொண்டு உரையாற்றிய விஜய், மாணவர்களின் கல்வி மற்றும் எதிர்கால வளர்ச்சியைப் பற்றி முக்கியமான கருத்துகளைப் பகிர்ந்தார்.
“நீட் மட்டும்தான் உலகமா?” என்ற கேள்வியுடன் தனது உரையைத் தொடங்கிய அவர், “படிப்பில் சாதிக்க வேண்டும் என்பது நிச்சயம். ஆனால் ஒரு குறிப்பிட்ட பாடத்துறையை மட்டும் முக்கியத்துவம் கொடுத்து அதில் மட்டும் சாதிக்க வேண்டும் என அழுத்தம் கொடுப்பது தவறு. நீட் தேர்வைத் தாண்டியும் பெரிய உலகம் இருக்கிறது. மாணவர்கள் பல துறைகளில் சாதிக்க வாய்ப்புகள் நிறைய உள்ளன,” என்றார்.
பெற்றோர்கள் மீது அவர் முக்கியமான வேண்டுகோளை முன்வைத்தார். “உங்கள் குழந்தைகள் மீது எந்தவித அழுத்தமும் தராதீர்கள். அவர்களுக்கு என்ன பிடிக்கிறது என்பதை அறிந்து வழிநடத்துங்கள்,” என்றார். மேலும், சமுதாயத்தில் சாதி, மதத்தை அடிப்படையாகக் கொண்ட பாகுபாடுகளைத் தூண்டவேண்டாம் என வலியுறுத்தினார்.
“விவசாயிகள் விதைக்கும் போது சாதி பார்த்து விதைக்கிறார்களா ? இயற்கை – வெயிலும், மழையும் – சாதி மதம் பார்த்து வருகிறதா?” எனக் கேட்ட விஜய், “போதைப் பொருட்களை ஒதுக்கி வைப்பது போலவே, சாதியும் மதத்தையும் ஒதுக்க வேண்டும். அது எல்லாருக்கும் நல்லது,” என்றார்.
தந்தை பெரியார் மீது சாதிசாயம் பூசப்படுவதையும், ஒன்றிய சிவில் சேவைகள் தேர்வில் சாதி அடிப்படையில் கேள்விகள் எழுப்பப்படுவதையும் கடுமையாக கண்டித்தார்.
அத்துடன், மக்கள் ஜனநாயக கடமை பற்றி விழிப்புணர்வு ஏற்படுத்தும் விதமாக, “வீட்டிலுள்ள பெற்றோரை ஊழல் செய்யாதவர்களை தேர்தலில் தேர்வு செய்ய வேண்டிய ஜனநாயக கடமை செய்யச் சொல்லுங்கள். அடுத்த வருடம் வண்டிவண்டியாக பணத்தை கொண்டு வந்து கொட்டுவார்கள். அது எல்லாம் உங்களிடமிருந்து கொள்ளையடிக்கப்பட்ட பணம். அதை ஏற்றுக்கொள்ள வேண்டாமென்பது உங்கள் பொறுப்பு,” என தெரிவித்தார்.
இந்த விழாவில் பல மாணவர்கள் மற்றும் அவர்களுடைய பெற்றோர்கள் கலந்துகொண்டு விஜய்யின் உரையால் ஊக்கமடைந்தனர்.